கஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, பசுமையை மீட்டெடுக்க அரசு பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய வட்டாரங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஒரு கோடிக்கும் மேலான மரங்கள் சேதடைந்தன. வீடுகளும், மீனவர்களின் படகுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி பட்டுக்கோட்டை அருகே வேப்பங்காடு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் சார்பில் கஜா புயல் முதலாமாண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அப்போது, கஜா புயலில் உயிரிழந்த உயிரினங்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மரங்களுக்கும் அஞ்சலிசெலுத்தும் விதமாக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தனர்.
பின்பு பள்ளி வளாகம் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து இழந்த பசுமையை மீட்டெடுக்க அனைவரும் மரக்கன்றுகளை நடுவோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
WRITE A COMMENT