திருப்பூர்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி பள்ளியில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் குறும்படங்கள் திரையிடப்பட்டன.
பூலுவபட்டி மாநகராட்சி பள்ளியில்610 மாணவ மாணவியர் படிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சர்வதேச அளவில் குழந்தைகளை மையப்படுத்தி வந்த, திரைப்படங்களை திரையிட்டு வருகின்றனர்.
இதன்படி இந்த ஆண்டு 32 திரைப்படங்கள் 5 திரைகளில் காண்பிக்கப் பட்டன. இதில் 20 பன்னாட்டு படங்களும், 12 குறும்படங்களும் அடக்கம். சில்ட்ரன் ஆப் ஹெவன், லைப் ஆப் பை, சைல்டு, பாட்டில், கீரா, எல் எம்பிளியோ, பிளையிங் புக்ஸ், டூயல், சைல்ட் லேபர், ஷூ, தாய்லாந்து குறும்படம், மேஸ்ட்ரோ, ஒ ஷீப், ரீட் மீ, ஸ்மோகிங் கில்ஸ், தி வால், தி சைலன்ட் சைல்ட், கலர் பிஸ், பிளாக் ஹோல், புரூனோ அன் ஜூலியட் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.
மேலும் முதல் மார்க், பார் சைக்கிள், மீன், காத்து என்ன விலை, பசி, திங்கள், புழுகினி, தப்புக்கணக்கு, அமளிதுமிளி, சோஷியல் மீடியா சுப்பிரமணி, மேன் உள்ளிட்ட குறும் படங்கள் திரையிடப்பட்டன. ஒரு வகுப்புக்கு இரு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படத்தை திரையிட்டு விளக்கினர். மேலும் ஒவ்வொரு பட முடிவிலும் கலந்துரையாடல் நிகழ்வில் மாணவர்கள் உற்சாகமாய் பங்கேற்றனர். பாடல், சண்டைக் காட்சி, விறுவிறுப்பு இல்லாது இயல்பான படங்களை ஆர்வம் குன்றாமல் பார்த்தது வித்தியாசமான அனுபவ மாய் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மாற்றத்தை ஏற்படுத்தும்
திரைப்பட விழா குறித்து பள்ளியின் தலைமையாசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா கூறும்போது, 'ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைப்பட விழா நடத்தி வருகிறோம். இது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல திரைப்படம் மாணவர்களிடயே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என எண்ணுகிறோம்" என்றார்.
அயல் நாடுகளிலும் பெரு நகரங்களிலும் மட்டும் நடக்கும் திரைப்பட விழாக்கள், அரசுப் பள்ளியிலும் நடைபெறுவது மிகப்பெரும் சாதனையாக வரவேற்கத்தக்கது என பெற்றோர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியை ஆசிரியர் எர்னஸ்ட் ரிச்சர்ட் ஒருங்கிணைத்தார்.
WRITE A COMMENT