வி.சுந்தர்ராஜ்
தஞ்சாவூர்
தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையான பொருட்களை கொண்டு ‘பயோ பிளாஸ்டிக்’ பிளாஸ்டிக் பொருட்களை உருவாக்கியுள்ள அரசு பள்ளி மாணவி எஸ்.அர்ச்சனா தேசிய அறிவியல் போட்டிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
மக்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதால், அவற்றுக்கு அரசு தடை விதித்துள்ளது. மக்களுடன்அன்றாட வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக தீங்கு விளைவிக்காத பொருளை கண்டறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும்மாணவி எஸ்.அர்ச்சனா இயற்கையான பொருட்களை கொண்டு உயிரி நெகிழி என்ற ‘பயோ பிளாஸ்டிக்’ பொருட்களை உருவாக்கியுள்ளார். அதாவது இயற்கையாக கிடைக்கும் சோளமாவு மற்றும் கிளிசரின், வினிகர் ஆகியவற்றை கொண்டு 28 நாட்களில் மக்கும் தன்மை கொண்ட இந்த மாற்றுப் பொருளை அவர் உருவாக்கி இருக்கிறார்.
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியின், மாணவி அர்ச்சனாவின் பயோ பிளாஸ்டிக் பொருட்கள் இடம் பெற்றன. கண்காட்சியில் இடம் பெற்ற 147 படைப்புகளில் அர்ச்சனாவின் பயோ பிளாஸ்டிக் முதலிடம் பிடித்து, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றது.
இதுகுறித்து மாணவி அர்ச்சனா கூறும்போது, "நான் கண்டறிந்துள்ள இந்த பயோ பிளாஸ்டிக்கை கொண்டு பல்வேறு பொருட்கள் தயாரிக்கலாம். இதற்கான உற்பத்திச் செலவு மிகவும் குறைவு. இந்த திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். எனது இந்த கண்டுபிடிப்புக்கு பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் தான் காரணம்" என்றார்.
அர்ச்சனாவின் வழிகாட்டி ஆசிரியை டி.ஜென்சிரூபா கூறும்போது, மாணவி அர்ச்சனாவின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான், அவரை இந்த பயோ பிளாஸ்டிக் பொருட்களை கண்டறிய காரணமாக இருந்தது" என்றார். மாணவி அர்ச்சனாவை பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.எஸ்.ஆர்.கருணாநிதி மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.
WRITE A COMMENT