விருதுநகர்
ராஜபாளையம் அருகே சேத்தூர் பிராக்குடி கண்மாய் கரை பகுதிகளில் விவசாயிகளுடன் இணைந்து 4,500 பனை விதைகளை பள்ளி மாணவர்கள் விதைத்தனர். மாணவர்களின் இந்த பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியில் அமைந்துள்ளது பிராக்குடி கண்மாய் கரை. இங்கு தமிழக அரசு சார்பில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.
இதில் வட்டாட்சியர், பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள், அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேசும்போது, கண்மாய் கரையோரங்களில் பனை விதைகள் விதைப்பதன் மூலம் பனை மரங்கள் வளர்ந்து அவற்றின் வேர்கள் பரவி அரிப்பு ஏற்படாமல் கரைகளைப் பாதுகாக்கும். கண்மாய்களில் நீர் வறட்சி ஏற்படுவதை பனை மரங்கள் தடுக்கும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
அதைத் தொடர்ந்து அப்பகுதிவிவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து அரசு பள்ளி மாணவ,மாணவிகள் 4,500 பனை விதைகளை கண்மாய் கரையோரங்களில் விதைத்தனர். கண்மாயை பாதுகாக்கும் வகையில் பனை விதைகளை விதைத்த மாணவ-மாணவிகளை அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் மற்றும் விவசாயிகளும் வெகுவாக பாராட்டினர்.
WRITE A COMMENT