திருச்சி
மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு முதல் தவணைத்தொகையை செலுத்தி சேமிப்பு கணக்கை ஆசிரியர்கள் தொடங்கியுள்ளனர்.
திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் மாத ஊதியத்திலும், தன்னார்வலர்கள் வழங்கும் நிதியைக்கொண்டும் பள்ளியில் பயிலும் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி திட்டம் என்ற செல்வமகள் திட்டத்தில் முதல் தவணைத் தொகையாக ரூ.300 செலுத்தி அஞ்சலக கணக்கை தொடங்கிக் கொடுத்துள்ளனர். இதற்கான சேமிப்பு கணக்கு புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கும் விழா பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கே.எஸ்.ஜீவானந்தன் தலைமை வகித்து மாணவிகளுக்கு சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கினார். அப்போது, மாணவிகளின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் தவணைத் தொகையை அஞ்சலகத்தில் தவறாமல் செலுத்துமாறு மாணவிகளின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எஸ்.ஜீவானந்தன் கூறும்போது, "எங்கள் பள்ளியின் படிக்கும்மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கூலி வேலைக்குச் செல்லும்அவர்களுக்கு பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லை. எனவே, எங்கள் பள்ளியில் படிக்கும் 10 வயதுக்குட்பட்ட 28 மாணவிகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதல் தவணைத் தொகையை நாங்களே செலுத்தி கணக்கை தொடங்கிக் கொடுத்துள்ளோம்.
தொடர்ந்து தவணைத் தொகையை செலுத்த அவர்களது பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளோம். அப்படி செலுத்துகிறார்களா என்பதையும் தொடர்ந்து கண்காணிப்போம்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியையகள் உமா, சகாயராணி, சரண்யா, உஷாராணி மற்றும் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
WRITE A COMMENT