காஞ்சிபுரம்
கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் திருவிழாவில் உத்தரமேரூர் அருகில் உள்ள அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டமான புலியாட்டம் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, மத்திய புவியியல் துறை, மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை, மத்திய எரிசக்தி துறை மனித வள மேம்பாட்டுத் துறைமற்றும் விக்யான் பிரசார் ஆகியவை இணைந்து நடத்தும் இந்திய சர்வதேச அறிவில் திருவிழா கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
இந்த அறிவியல் திருவிழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அங்கம்பாக்கம், கீழ்கதிர்பூர், உத்திரமேரூர், மாகரல், பொன்னியம்மன் பட்டறை, தேனம்பாக்கம், கிளார் ஆகிய பகுதிகளில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் இருந்தும், கடுக்கலூர் உயர்நிலைப் பள்ளியில் இருந்தும் 40 மாணவர்கள், 13 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்கள் பங்கேற்பதற்காக மக்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், டி.கே.எஸ்.இளங்கோவன், காஞ்சிபுரம் க.செல்வம் ஆகியோரும், மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸும் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தனர்.
இந்த அறிவியல் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலைத் திருவிழாவில் உத்தரமேரூர் அருகில் உள்ள அங்கம்பாக்கம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தின் கிராமிய கலையான புலியாட்டம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர். மேலும் இம்மாணவர்கள் தங்கள் கிராமத்தின் சிறப்புகளையும், தங்கள்கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர். கிராமத்தின் தற்போதைய உடனடி தேவைகள் குறித்தும் எடுத்துக் கூறினர்.
WRITE A COMMENT