காட்பாடி
போட்டித் தேர்வு புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சன்பீம் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டிகருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் முன்னிலை வகித்தார். இந்த கருத்தரங்கத்தை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்துப் பேசியதாவது:பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள நன்றாக படிக்க வேண்டும். பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வி படிப்பை தேர்வு செய்யும்போது எந்த பாடப் பிரிவை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் ஆங்கில மொழியில் பின்தங்கி விடுவதால் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும்போது தாழ்வுமனப்பான்மையால் தகவல் பரிமாற்றம் சரியாக செய்ய முடிவதில்லை. இந்த குறையை களைய தமிழ் பாடத்துடன் ஆங்கில பாடத்தையும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். போட்டித் தேர்வு புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படிக்கும் பழக்கத்தை மாணவ, மாணவிகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டி கருத்தரங்கத்தை மாணவ -மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறினார்.
சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர் நெடுஞ்செழியன் பங்கேற்று மாணவ, மாணவிகள் தேர்வு செய்ய வேண்டிய உயர்கல்வி பாடப் பிரிவுகள் குறித்தும் அது தொடர்பான தேர்வுகள் குறித்தும் விளக்கினார்.
WRITE A COMMENT