வாட்ஸ்-அப் குழுவில் ஒருங்கிணைந்து அரசு பள்ளியின் பழைய வகுப்பறைகளை சீரமைக்கும் முன்னாள் மாணவர்கள்


வாட்ஸ்-அப் குழுவில் ஒருங்கிணைந்து அரசு பள்ளியின் பழைய வகுப்பறைகளை சீரமைக்கும் முன்னாள் மாணவர்கள்

எஸ்.கோபு

பொள்ளாச்சி அருகே வாட்ஸ்-அப்குழுவில் ஒருங்கிணைந்து, தாங்கள் படித்த அரசு பள்ளியின் பழைய வகுப்பறைகளை சீரமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளனர் முன்னாள் மாணவர்கள்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் அருகேஅமைந்துள்ளது, வேட்டைக்காரன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியை சுற்றியுள்ள காளியாபுரம், நரிக்கல்பதி, வெப்பரை, சேத்துமடை, செமணாம்பதி கிராமங்கள் மற்றும் ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புஓடுகளால் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களில் இப்பள்ளி இயங்கி வந்தது. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்ததால், வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, கூடுதல் வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதையடுத்து ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த வகுப்பறைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. இதனால் 15 வகுப்பறைகள் கொண்ட பழைய கட்டிடங்கள் எந்த பயன்பாடும் இன்றி கைவிடப்பட்டது. பராமரிப்பு இல்லாததால் மேற்கூரையில் உள்ள ஓடுகள் கொஞ்சம், கொஞ்சமாக கழன்று விழத்தொடங்கின. இதேபோல் கதவு, ஜன்னல்களும் சேத மடைந்தன.

இந்நிலையில் பழைய கட்டிடத்தில் இருந்த வகுப்பறைகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த வகுப்பறைகளின் நிலைகண்டு கவலையுற்றனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி, பழைய கட்டிடத்தை புனரமைத்து கொடுக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து 'வேட்டைக்காரன் புதூர் பள்ளி மறுசீரமைப்பு குழு' என்னும் 'வாட்ஸ்-அப்' குழு அமைத்து நண்பர்களை ஒருங்கிணைத்து, தற்போதுபள்ளி கட்டிட சீரமைக்கும் பணியில்ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் மாணவர்களின் இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்பும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:கடந்த 1950–ம் ஆண்டு இந்த பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 1990–ம் ஆண்டு இருபாலார் பள்ளியாக மாற்றப்பட்டு, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளிக்கு 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரம்பிக்குளம், டாப்சிலிப் பகுதியை சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில வருகின்றனர்.

தற்போது இப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 622 மாணவர்கள் பயின்று வருகின்றனர். புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதால் பழைய கட்டிடங்கள் கைவிடப்பட்டுள்ளன. சமீபத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள்கட்டிடங்களை ஆய்வு செய்து கட்டிடம் நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சேதமடைந்த மேற்கூரை மற்றும் கட்டிடங்களை சீரமைத்து வருகிறோம். இடப் பற்றாக்குறையில் இயங்கி வரும் மேல்நிலை வகுப்புகளின் தாவரவியல் ஆய்வகம், விலங்கியல் ஆய்வககளின் பயன்பாட்டுக்கு இந்த பழைய கட்டிடத்துக்கு மாற்ற பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம்.

கட்டிட சீரமைக்க தேவையான உதவிகளை பெற முன்னாள் மாணவர்களை வாட்ஸ் அப் குழுவின் மூலமாக ஒருங்கிணைத்து செய்து வருகிறோம். இக்குழுவின் மூலம் பள்ளி வளர்ச்சிக்கு தேவையான உபகரணங்கள், விளையாட்டு திடல் மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

தலைமையாசிரியர் உள்ளிட்ட 39 பணியிடங்களை கொண்ட இப்பள்ளியில், கலை ஆசிரியர், தொழில் ஆசிரியர், இசை ஆசிரியர், ஆய்வக உதவியாளர், பதிவு எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், துப்புரவாளர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை விரைந்து நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

WRITE A COMMENT

x