விருதுநகர்
ராஜபாளையத்தில் மாணவிகளுக்கு பாடல் பாடி புதுமையான முறையில் பாடம் நடத்தி வருகிறார் அரசு பள்ளி இசை ஆசிரியர் செல்வராசு.
ராஜபாளையத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றி வருபவர் த.செல்வராசு. இவர் இசை, கவிதை புனைவதிலும், அதற்கு சொந்தமாக மெட்டு அமைத்து பாடல் பாடியும் மாணவர்களை தனது இசையால் கவர்ந்து வருகிறார். கவிதை எழுதுவதிலும், சுயமாக மெட்டு அமைத்து பாடல் பாடி பாடம் சொல்லிக் கொடுப்பதிலும் புதுமை படைத்து பல விருதுகளைக் குவித்து வருகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அன்று அண்ணா பிறந்த நாளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முத்தமிழ் மையத்தில் எழுத்தாளர்களுக்கான உயர்ந்த விருதான அண்ணா விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடமிருந்து பெற்றார். இதுமட்டுமின்றி, சென்னை செந்தமிழ் முற்றம், திருவண்ணாமலை தமிழ் ஐயா கவிக்கழகம் சார்பில் கவிமணிச்சுவர் விருது, தஞ்சை திருக்குறள் விழிப்புணர்வுக் குழு சார்பில் குறள் செம்மல் விருது, சென்னை அம்மா தமிழ்ப் பீடம் சார்பில் அம்மா கவிக்குயில் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இசை ஆசிரியர் செல்வராசு பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "பாடத்தை வெறும் பாடமாக மட்டும் படிக்காமல் அதில் இசையை சேர்ந்து கற்பித்தால் மாணவர்கள் மனதில் எளிதாகப் புரியும். அதைத்தான் நான் செய்து வருகிறேன். அதோடு, சொந்தமாக கவிதை எழுதி மெட்டு அமைத்து பாடல் பாடுவது மாணவர்களுக்கு உந்துதலையும், தூண்டுகோலாகவும் அமைகிறது. இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைந்துள்ளது" என்றார்.
WRITE A COMMENT