அரசு பள்ளி மாணவர் உருவாக்கிய  சோலார் சைக்கிள்


அரசு பள்ளி மாணவர் உருவாக்கிய  சோலார் சைக்கிள்

கி. பார்த்திபன்

நாமக்கல்

நாமக்கல் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகில் உள்ளது தண்ணீர் பந்தல்காடு அரசு உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் எஸ். மோகன். இவர் சூரிய ஒளியில் இயங்கும் பேட்டரி சைக்கிளை உருவாக்கி இருக்கிறார். இந்த சோலார் சைக்கிள் நாமக்கல் மாவட்டஅளவிலான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பிடித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது குறித்து மோகன் கூறியதாவது:

குடும்ப சூழல் காரணமாக 6-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டருகே உள்ள லேத் பட்டறையில் வேலைக்கு சேர்ந்தேன். சில மாதங்கள் வரை அங்கு பணிபுரிந்தேன். அப்போது தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வுமேற்கொண்டு, பட்டறையில் பணிபுரிந்தஎன்னை குழந்தைத் தொழிலாளர் எனக்கூறி மீட்டனர். பின்னர் மீண்டும் 6-ம் வகுப்பில் சேர்த்து விட்டனர். பள்ளியில் சேர்ந்து மாணவர்களுடன் பழகத் தொடங்கியது, மகிழ்ச்சியாக இருந்தது. ஓய்வு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் பணிபுரிந்த பட்டறைக்கு சென்று பணிகளை கவனித்தேன். அங்குள்ளவர்களுக்கு சிறு, சிறுஉதவிகள் செய்வேன். அப்போது ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது.

கடந்த 6 மாதங்களுக்கு முன் சூரிய ஒளியில் பேட்டரியில் இயங்கும் சைக்கிளை வடிவமைக்க திட்டமிட்டேன். உடனடியாக முயற்சியிலும் உடனடியாக ஈடுபட்டேன். இதற்காகஎனது சித்தியிடம் இருந்து சிறிதுதொகை வாங்கிக் கொண்டு, பணியில் இறங்கினேன். சூரியஒளி மூலம்மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை வாங்கி சைக்கிளில் பொருத்தினேன்.

பின்னர், அதை மின்சாரமாக மாற்றம் செய்யும் கருவியுடன் பொருத்தினேன். சைக்கிள் இழுவைக்காக சீலி பேன் மோட்டார் பயன்படுத்தியுள்ளேன். சுமார் 6 மாத முயற்சிக்குப் பின், கடந்த மாதம் பேட்டரி மூலம் இயங்கும் சைக்கிள் தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

சூரிய ஒளி மட்டுமின்றி மின் இணைப்பு மூலம் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி செய்துள்ளேன். ஒரு முறை சார்ஜ் செய்தால் 5 கி.மீ., தூரம்வரை பயணிக்க முடியும். சார்ஜ் முடிந்துவிட்டால் வழக்கம்போல் சைக்கிளை இயக்கிச் செல்லலாம். இதை தயாரிக்க ரூ. 5 ஆயிரம் செலவானது. எதிர்காலத்தில் இதுபோன்று புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

சோலார் சைக்கிள் உருவாக்கிய மாணவர் மோகனை பள்ளியின் தலைமையாசிரியை கே. வசந்தி, அறிவியல் ஆசிரியர் என். ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

WRITE A COMMENT

x