புதுக்கோட்டை  கறம்பக்குடி அருகே முதலிப்பட்டியில்  குளத்தை ஆய்வு செய்து ஆட்சியரிடம் மாணவர்கள் அறிக்கை


புதுக்கோட்டை  கறம்பக்குடி அருகே முதலிப்பட்டியில்  குளத்தை ஆய்வு செய்து ஆட்சியரிடம் மாணவர்கள் அறிக்கை

கே.சுரேஷ்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே முதலிப்பட்டியில் உள்ள விசாலி குளத்தைத் தூர் வாரி, வரத்து வாய்க்காலில் தடுப்பணை அமைக்க வேண்டுமென அக்குளத்தை ஆய்வு செய்த அரசுப் பள்ளி மாணவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப் பித்தனர்.

புதுக்கோட்டை சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நவம்பர் 2-ம் தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக தட்டாமனைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கே.சத்தியநாராயணன், மாணவிஎம்.ராஜேஸ்வரி ஆகியோர் கறம்பக்குடி அருகே முதலிப்பட்டியில் உள்ளவிசாலி குளத்தை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராக எம்.ஸ்டாலின் சரவணன் செயல்பட்டார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியை தங்கள் ஆசிரியர்களுடன் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தனர். மாணவர்களின் திறமையைப்பாராட்டிய ஆட்சியர், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

ஆய்வு அறிக்கை குறித்து மாணவி எம்.ராஜேஸ்வரி, மாணவர் கே.சத்தியநாராயணன் ஆகியோர் கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முதலிப்பட்டியில் 188 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது விசாலிகுளம். இந்த குளத்தையும் அதற்கான வாய்க்கால்களையும் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டோம். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் குளத்தின் பாசனத்தையே நம்பியுள்ளனர்.இப்போது இங்கு ஒரு போகம் மட்டுமே விவசாயம் நடக்கிறது.குளத்தைத் தூர் வாரினால் முப்போகமும் விளையும்.

இந்தக் குளம் புது ஆறு, காட்டாறு, மகாராஜா சமுத்திரம் போன்ற பிற நீர்நிலைகளுடனும் இணைந்தது. மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாகும்போது, வீணாகாமல் தடுக்கவரத்து வாய்க்காலில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். குளத்துக்கு தற்போது10 வகையான பறவைகள் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வலசைப் பறவைகள் நிறைய வந்ததாக ஊர் மக்கள் தெரிவித்தனர். குளத்தில் 8 வகையான நாட்டு மீன்களும், குளத்தைச் சுற்றிலும் 21 வகைச்செடிகளும், 12 வகை மரங்களும் இருக்கின்றன.

குளத்தின் அருகே குப்பை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தைச் சுற்றியுள்ள சீமைக்கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த ஆய்வின் மூலம் ஒரு வாழிடமாக நீர்நிலைகள் எத்தனை முக்கியமானவை என்பதையும் புரிந்துகொண்டோம். நீர்நிலைகளைப் பாதுகாப்பது, பராமரிப்பது, நீர்நிலைகளின் மாசுபாட்டைக் குறைப்பது, அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துவது ஆகிய செயல்பாடுகளின் தேவைகுறித்து இந்த ஆய்வு எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

WRITE A COMMENT

x