மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தங்களது கிராமத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், ஆபத்தான சூழலில் பரிசல்கள் மூலம் காட்டாற்றைக் கடந்து சென்று பாடம் பயில வேண்டிய சூழலுக்குத் மலை கிராம மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். புதிய பாலம் கட்டிக்கொடுக்குமாறு அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில், காந்தவயல், காந்தையூர், உளியூர், ஆளூர் என 4 மலையடிவார கிராமங்கள் உள்ளன. நகரப் பகுதியான மேட்டுப்பாளையம் செல்ல, லிங்காபுரத்துக்கும், காந்த வயலுக்கும் இடையே ஓடும் காந்தையாறு என்னும் காட்டாற்றைக் கடக்க வேண்டும்.
நீலகிரி மலையில் உள்ள கோத்தகிரி பகுதியில் பெய்யும் மழை இவ்வழியே பாய்ந்தோடு பவனியாற்றில் கலக்கிறது. இங்கு 2004-ல் ரூ.40 லட்சம்மதிப்பில் உயர்நிலைப் பாலம் கட்டப்பட்டது. ஆற்றின் கீழ் மட்டத்தில் இருந்து20 அடி உயரத்துக்கு பாலம் கட்டப்பட்டபோது, பாலத்தின் உயரத்தை குறைந்தபட்சம் 32 அடியாக உயர்த்திக்கட்டினால் மட்டுமே மழைக் காலத்தில்பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரித்தாலும், பாலம் நீரில் மூழ்காது என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி 20 அடி உயரத்திலேயே பாலம் கட்டப்பட்டது. இதனால், இப்பாலம் பலமுறை நீருக்கடியில் மூழ்குவதும், நீர் வடிந்த பின்னர் வெளியில் வருவதுமாக உள்ளது. இந்நிலையில், தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அதன் கிளை ஆறுகளான காந்தையாறு, மாயாற்றிலும் நீர்வரத்து அதிகரித்
துள்ளது. இதனால், காந்தையாற்றுப் பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கிவிட்டது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, தீவில் சிக்கியதுபோல பரிதவிக்கும், பொதுமக்கள் மறுகரைக்குச் செல்ல பரிசல்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
பாலத்தின் இருபுறமும் 30 அடி ஆழத்தில் காட்டாறு ஓடுவதால், சற்றே பிசகினாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதனால் இவ்வழியே போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. 4 கிராம மக்களும் வேறுவழியின்றி சிறிய பரிசல்கள் மூலம் காட்டாற்றைக் கடந்து செல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இக்கிராமங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து, பள்ளி சென்றுதிரும்ப வேண்டியுள்ளது.
இக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மாணவ, மாணவிகள், லிங்காபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி,சிறுமுகையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பயின்றுவருகின்றனர். மழையின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஆபத்தான சூழலில்தான் ஆற்றில் பரிசலில் பயணிகின்றனர். தற்போது 3 பரிசல்கள் இயக்கப்பட்டு வந்தாலும், ஒரு பரிசலில் 5 பேருக்கு மேல் பயணிக்க இயலாது என்பதால், இப்பகுதியினர் நகரப் பகுதிக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்தப் பாலத்தின் உயரத்தை அதிகரித்து, இப்பகுதி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் ஏற்படுத்தித் தர வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
WRITE A COMMENT