கோவை
பள்ளிகளில் ஒவ்வொரு சனிக் கிழமையும் 'மாஸ் கிளீனிங்' மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாணவர்களை சுகாதார தூதுவர்களாக நியமித்து, அவர்கள் மூலம் மாணவர்களுக்கும், தங்கள் இருப்பிடங்களில் உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தூய்மையைப் பேணிக்காக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிவளாகங்களில் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தூய்மைப் பணியை (மாஸ் கிளீனிங்) மேற்கொள்ள வேண்டும்.
தூய்மை குறித்து மாணவர்களி டையே உணர்த்துவதோடு, சுகாதார தூதர்களாக மாணவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தின் மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வளாகத்தில் தேங்காய் ஓடுகள், கழிவுப் பொருட்கள் எதுவும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சைப் பெற அறிவுறுத்த வேண்டும்.
டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்து, காலைநேர இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கநிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
WRITE A COMMENT