ராமேசுவரம்
மனித சமுதாயத்துக்கு தொல்லியல் வழங்கியுள்ள பங்களிப்பைக் கொண்டாடவும், அது சார்ந்த விழிப்புணர்வுக்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச தொல்லியல் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மனிதன் கடந்து வந்த பாதையை, அவன் வாழ்ந்த ஆதி காலத்தை அறிந்து கொள்ள பயன்படுத்தப்படும் அறிவியல் ஆய்வுமுறை தொல்லியல் ஆகும். தொல்லியல் ஆதாரங்களே வரலாறு உருவாக்கப்படுவதற்கான முதன்மைச் சான்றாக அமைகின்றன. கட்டிடங்கள், தொல்பொருட்கள், நிலத்தோற்றங்கள் ஆகியவற்றை அகழாய்வு மூலம் வெளிக்கொணர்ந்து அவற்றை ஆவணப்படுத்துதல், பகுத்தறிதல் ஆகிய வழிமுறைகள் தொல்லியலில் பின்பற்றப்படுகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக தொல்லியல் நாள் விழாகொண்டாடப்பட்டது. இவ்விழாவில், தமிழகத்தில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களான தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்,மாமல்லபுரம் சிற்பங்கள், நீலகிரி மலை ரயில், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் ஆகியவற்றின் படங்களும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட செம்பு மற்றும் கும்பா ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை மாணவர்கள் பார்த்து மகிழ்ந்தனர். பாரம்பரியச் சின்னங்கள் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவனும், நாணயங்கள் மற்றும் பழம்பொருட்கள் சேகரிப்பு குறித்து ஆசிரியர் பொ.அய்யப்பனும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
WRITE A COMMENT