டெலஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப் மூலம் மாணவர்களை அறிவியலை நேசிக்க வைக்கும் ஆசிரியர்


டெலஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப் மூலம் மாணவர்களை அறிவியலை நேசிக்க வைக்கும் ஆசிரியர்

ஒய்.ஆண்டனிசெல்வராஜ்

மதுரை

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அறிவியலை புரிய வைக்காவிட்டால் அந்த மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அறிவியல் புரியாத புதிராகவே மாறிவிடும். மதுரை அருகே உள்ள சிட்டம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பெ.சிவராமன், இவர் தனது மாணவர்களுக்கு அவ்வப்போது நடக்கும் வானிலை அறிவியல் மாற்றங்களை காட்சிப்படுத்தி எளிமையாகப் புரிய வைக்கிறார். அடிப்படையில் ஆங்கில பட்டதாரி ஆசிரியரான சிவராமன், அறிவியல் மீதான ஈர்ப்பால், தான் பணிபுரியும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் வகுப்புகளை எடுத்து வருகிறார்.

அதற்காக இவர் சொந்தமாக டெலஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப் உள்ளிட்ட வானியல் அறிவியல் கருவிகளை வாங்கி அவ்வப்போது நடக்கும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்ற வானியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி வருகிறார். இது குறித்து ஆசிரியர் சிவராமன் கூறியதாவது:

எனக்கு சிறு வயதில் அறிவியல் வகுப்புகள் கசந்தன. அதற்காகவே கல்லூரியில் ஆங்கிலம் எடுத்து படித்தேன். ஆனால், பள்ளியில் அறிவியல் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது நடக்கும் வானியல் நிகழ்வுகளையும் கவனிக்க ஆரம்பித்தேன். புரியாத அறிவியல் புரிய ஆரம்பித்தது. நமக்குப் புரிந்தஅறிவியலை, என்னிடம் படிக்கும் மாணவர்களுக்கும், கிராம மக்களுக்கும் புரிய வைத்தால் என்ன? என்று நினைத்தபோதுதான் இந்த அறிவியல் பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்தேன்.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம்நாட்களில் கோயில்களில் நடை சாத்துவார்கள். ஆனால், முன்னோர்கள் எதற்காக அதை செய்தார்கள் என்பதுதெரியாமலே தற்போது அதை மரபுபோல் பின்பற்றுகிறோம். அந்த காலத்தில் மின்விளக்குகள் கிடையாது. கோயில்கள் ஊருக்கு வெளியேதான் இருக்கும். அப்போது சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நாட்களில் நிலவு மறைக்கப்படுவதால் வெளிச்சம் இருக்காது.

மக்கள் இருட்டில் வர இயலாது என்பதால் அந்த நாட்களில் கோயில் நடை சாத்துவார்கள். இதுபோன்ற சில அறிவியலை கிராம மக்களுக்குப் புரிய வைக்கிறேன். அதற்காக மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரு அறிவியல் விழிப்புணர்வு குழுவை உருவாக்க ஆரம்பித்தேன். அவர்களுடன் விடுமுறை நாட்களில் கிராமம், கிராமமாகச் சென்று அறிவியல் கருத்துகளைப் பரப்ப ஆரம்பித்தேன்.

2013-ம் ஆண்டு நவம்பர் 17-ம்தேதி ஏற்பட்ட ஐசான் (ISON) வால்நட்சத்திரத்தை டெலஸ்கோப் மூலம் பள்ளிக் குழந்தைகளைப் பார்க்க வைத்தேன். சாதாரணமாக வந்து செல்லும் வால்நட்சத்திரங்களில் இருந்துமுற்றிலும் மாறுபட்டதாக விஞ்ஞானிகள் கூறிய இந்த ஐசான் வால்நட்சத்திரம் பூமி உருவாகும்போது ஏற்பட்டஒரு கல்தான். இந்த நட்சத்திரம், பூமியில் விழுந்தால் பாதிப்பு ஏற்படும் என்று மக்கள் அச்சப்பட்டனர். அப்போது நான், 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், கிராமங்களுக்கும் சென்று ஐசான் வால் நட்சத்திரம் ஒரு அறிவியல் நிகழ்வு மட்டுமே, அதனால் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்று பிரச்சாரம் செய்தேன்.

எங்கள் பள்ளி அருகே உள்ள பாறையில் ஒரு குன்று உள்ளது. வானியல் அறிவியல் மாற்றங்கள் ஏற்படும்போது அப்பாறையில் வானியல் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்வேன். அப்போதுதான், நமக்கென்று ஒரு டெலஸ்கோப் வாங்கினால் என்ன என்று ரூ.25 ஆயிரத்துக்கு டெலஸ்கோப் வாங்கினேன். 2018-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி நடந்த சந்திர கிரகணத்தை மதுரை கே.கே.நகர் பூங்காவில் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்தேன்.

ஸ்பெக்ட்ராஸ்கோப் கொண்டு பார்க்கும்போது, சூரியனில் வரக்கூடிய வெளிச்சத்தை 7 வண்ணங்களைப் பிரித்துக் காட்டும். மாணவர்களுக்காக, ஸ்பெக்ட்ராஸ்கோப் ஒன்றும் வாங்கினேன். தற்போது அதைக் கொண்டுகாலையில் ஏன் வானம் சிவப்பு நிறத்தில் இருக்கிறது?, மதியம் வண்ணமே இல்லாமல் இருப்பது ஏன்?, மாலையில் மறையும்போது மீண்டும் சிவப்பாக மாறுவது ஏன்? என்ற அடிப்படை அறிவியல் சந்தேகங்களையும், இந்த நிகழ்வுகள் எதற்காக எப்படி நடக்கின்றன என்பதையும் சொல்லிக் கொடுக்கிறேன். டிசம்பர் 26-ம் தேதி, வளைவுசூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இந்தியாவிலேயே மதுரை, கோவையை தவிர்த்து மற்ற பகுதிகளில் இந்த சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணமாகவே தெரிய வாய்ப்புள்ளது. அதனால், மதுரையில் தெரியும் இந்த வளைவு சூரிய கிரகணத்தை 100 இடங்களில் பார்க்க ஏற்பாடு செய்துள்ளேன்" என்றார்.

FOLLOW US

WRITE A COMMENT

x