அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: ஆசிரியர்களுக்கு புதுவை அமைச்சர் பாராட்டு


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: ஆசிரியர்களுக்கு புதுவை அமைச்சர் பாராட்டு

காரைக்கால்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் ஆசிரியர்களின் முயற்சி பாராட்டுக்குரியது என்று புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர்ஆர்.கமலக்கண்ணன் கூறினார்.

புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழாகாரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, ‘அன்புள்ள ஆசிரியருக்கு' என்ற சிறப்பு மலரை வெளியிட்டுப் பேசியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நிகழாண்டு காரைக்கால் மாவட்டத்தில் கணிசமான அளவு சேர்க்கை அதிகரித்துள்ளது. இதற்கான பங்களிப்பையும், முயற்சியையும் மேற்கொண்ட ஆசிரியர்களின் பணி பாராட்டத்தக்கது.

மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்தபுரிதலை பெற்றோர்களுக்கு ஏற்படுத்திஇந்த முயற்சியை ஆசிரியர்கள் தொடர வேண்டும். அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்து வருவது குறித்த புரிதலை பெற்றோர்களுக்கு கல்வித் துறையினர் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்த்தமைக்காக பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகியோரை விழாவில் அமைச்சர் கவுரவித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதா ஆனந்தன், கே.ஏ.யு.அசனா, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே.கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.அல்லி, பள்ளி வட்ட துணை ஆய்வாளர்கள் கா.கண்மணி, ஏ.பாலசுப்ரமணியன், ஆசிரியர் கூட்டமைப்புத் தலைவர் வி.முத்தமிழ்குணாளன், பொதுச் செயலாளர் ஆர்.காளிதாசன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x