காய்கறி சாகுபடியில் அசத்தும் மாணவ விவசாயிகள்


காய்கறி சாகுபடியில் அசத்தும் மாணவ விவசாயிகள்

கோவை

மாணவ விவசாயிகளாக மாறி, காய்கறி சாகுபடியில் அசத்தி வருகின்றனர் கோவை பள்ளி மாணவர்கள்.

கோவை வடவள்ளியில் உள்ளது,மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி. அரசு உதவி பெறும் இப்பள்ளியில் 700 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பரந்து விரிந்து காணப்படும் பள்ளி வளாகத்தின், ஒரு பகுதியில் காய்கறி சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர், இப்பள்ளியின் மாணவ விவசாயிகள். காய்கறி தோட்டத்தில், தலைமை ஆசிரியையின் கட்டளைபடி, மும்முரமாக களையெடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்தோம். தங்கள் விவசாய அனுபவம் குறித்து மாணவ, மாணவிகள் கூறும்போது,“காய்கறி சாகுபடியில் விதைப்பு,பராமரிப்பு, உரமிடுதல், களையெடுத்தல், அறுவடை செய்தல் குறித்து அளிக்கப்பட்ட பயிற்சி அடிப்படையில் மாணவர் தோட்டத்தைப் பராமரித்து வருகிறோம். அறுவடைக்கு பின்னர் காய்கறிச் செடிகளைப் பறித்து அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் பாத்திகளில் உள்ளநிலத்தை சாகுபடிக்கு தயார் செய்வோம். அதற்கு மண்ணை பொலபொலவென்று கொத்தி சமன் செய்துநீர்ப்பாய்ச்சுகிறோம். பின்னர் அதில் மக்கிய உரமிட்டு பண்படுத்தி, விதைகளை நட்டு வளர்த்து பராமரிக்கிறோம். இவ்வாறு தொடர்கிறது எங்கள் மாணவர் தோட்ட காய்கறி சாகுபடி முறைகள்.

மாணவர் தோட்டம்நாங்கள் விளைவித்த காய்கறியுடன், மதிய உணவுக்கான சாம்பார் சமைக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைஅளிக்கிறது. எங்களின் மதிய உணவுக்கு தேவையான அளவுக்கு காய்கறிகள் உற்பத்தி செய்ய முடியாவிட்டாலும், எங்கள் உணவில் நாங்கள் சாகுபடி செய்த காய்கறிகளும் இருப்பது மனநிறைவை அளிக்கிறது” என்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை சி.செல்வகுமாரி கூறும்போது, ‘‘பள்ளியில் செயல்படும் சுற்றுச்சூழல் மன்றத்தின் மூலமாக, பள்ளி வளாகத்தில் 30 சென்ட் 'மாணவர் தோட்டம்' அமைக்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தில் உறுப்பினராக உள்ள 45 மாணவர்கள் தோட்ட பராமரிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தோட்டம் அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கோவை இருகூரைச் சேர்ந்தஇயற்கை விவசாயி தங்கவேலு செய்துகொடுத்தார். காய்கறிகளுக்கு இயற்கை முறையில் பஞ்ச கவ்யா கரைசல், மாட்டின் எரு மற்றும் இலை, தழைகளை மக்கச் செய்து மக்கிய உரமாக்கி இயற்கை உரமாகப் பயன்படுத்தி வருகிறோம். அவரை, பீர்க்கன், பூசணி, வெண்டை,தக்காளி, பாலக்கீரை, புளிச்சக்கீரை, அரைக்கீரை, அகத்தி கீரை, முருங்கை, வெள்ளரி, முள்ளங்கி போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் மூலமாக அறுவடை செய்து, சாம்பாருக்கு சேர்க்கும் மற்றகாய்கறிகளுடன் சேர்த்து, மதிய உணவுடன் வழங்குகிறோம். தாங்கள் உற்பத்தி செய்த, காய்கறியை உணவாக உட்கொள்வது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் முயற்சிக்கு கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.முருகன், மாவட்ட சுற்றுச்சூழல் மன்றஒருங்கிணைப்பாளர் லோகாம்பாள் மற்றும் பள்ளி அறக்கட்டளை நிர்வாகத்தினர் ஊக்கமளித்து வருகின்றனர்” என்றார்

FOLLOW US

WRITE A COMMENT

x