த.சத்தியசீலன்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், கல்வி மற்றும் தனித்திறனில் சிறந்து விளங்கும் மாணவர்களை, வெளிநாடுகளுக்கு சுற்றுலாஅழைத்துச் சென்று மகிழ்விக்கும் திட்டம் கடந்த ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த கல்வியாண்டில் சுற்றுலா செல்ல மாநிலம் முழுவதும் இருந்து 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 30 பேர் சுற்றுலா சென்று திரும்பிய நிலையில், மீதமுள்ள 20 பேர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதில் கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த த.ரூபன்ராஜ், கிணத்துக்கடவு அரசுமேல்நிலைப் பள்ளியில் படித்த லோகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதுகுறித்து மாணவர் த.ரூபன்ராஜ் கூறும்போது, ‘‘எங்கள் பள்ளி ஓவிய ஆசிரியர் ஆனந்தராஜ் பொம்மலாட்டக் கலையில் வல்லவர். அவரிடம் பொம்மலாட்டம் கற்றுக்கொண்டேன். பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது,பள்ளி கல்வி நடத்திய மாநில கலைவிழாவில் கலந்து கொண்டு எங்கள் குழு முதல் பரிசு பெற்றது. இந்த வெற்றி என்னை வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தேர்வு செய்தது. அதன்பின்னர் ஆசிரியருடன் சேர்ந்து கிராமப்புறங்களுக்கும், அரசு பள்ளிகளுக்கும் சென்று பல்வேறு கருத்துகளை மையமாக வைத்து பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’' என்றார்.
இவர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிப்ளமோ படித்து வருகிறார்.
சி.லோகநாதன் கூறும்போது, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் போது ஓவிய ஆசிரியைகள் கௌசல்யா, ராஜலட்சுமி ஆகியோர் மணற் சிற்பங்கள் வடிக்க கற்றுக் கொடுத்தனர். இக்கலையைக் கற்றுக்கொண்டு பல்வேறு விழிப்புணர்வு மணற் சிற்பங்கள் வடித்தேன். ‘நான் வாழ்வது உனக்காக' என்ற தலைப்பில் மரத்தில் தாயின் முகத்தை வரைந்து, ‘மரத்தை வெட்டாதீர்' என குழந்தை அழுவதைப் போல் வடிவமைக்கப்பட்ட மணற் சிற்பம் பலரைக் கவர்ந்தது. கடந்த ஆண்டு பள்ளி கல்வித்துறை நடத்திய போட்டியில் பங்கேற்று மாநில அளவில் முதல் பரிசு பெற்று, வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தேர்வாகி உள்ளேன்' என்றார்.
WRITE A COMMENT