கரூர்
கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெள்ளியணை அரசுப் பள்ளிக்கு இரண்டு பரிசுகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து வெள்ளியணை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பெ.தனபால் கூறும்போது, ''கரூர் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக மாவட்ட அளவிலான 47-வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சி புலியூர், ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் நேற்று (15.10.2019) நடைபெற்றது.
இதில் கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மு.விஷ்ணு , சு.ஜெகன் ஆகியோர் 'இரு மாணவர் ஒரு படைப்பு' பிரிவில் கலந்துகொண்டனர். 'மின் கம்பியில் ஏற்படும் மின் அதிர்ச்சியைத் தவிர்த்தல்' என்னும் தலைப்பில் செயல் திட்டத்தைக் காட்சிப்படுத்தி விளக்கினர். இதற்காக இரு மாணவர்களும் இரண்டாம் பரிசும் பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றுள்ளனர்.
ஆசிரியர் படைப்புப் பிரிவில் நான் (பெ.தனபால்) 'தண்ணீர் செயற்கைக்கோள்' என்னும் தலைப்பில் செயல் திட்டத்தை உருவாக்கினேன். அதற்கு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் கிடைத்துள்ளது.
வெள்ளியணை பள்ளியின் அறிவியல் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.
WRITE A COMMENT