அரியலூர்
பள்ளி மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து 100-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார் அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர். மேலும், இவர் கடந்த 9 ஆண்டுகளாக விடுப்பே எடுக்காமல் பணிபுரிந்து பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செங்குட்டுவன்(52).
2005-ம் ஆண்டு ஆண்டிமடம் அருகேயுள்ள தெற்குப்பட்டி கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர், தேவாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய இவர், தற்போது ஜெயங்கொண்டத்தை அடுத்த புதுச்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆசிரியராக பணியில் சேர்ந்தது முதல், மாணவர்களை ஊக்கப்படுத்தி அறிவியலில் பல சாதனைகளை படைக்க செய்து வருகிறார்.
தேசிய அளவில் பரிசுகள்
அரியலூரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், ‘சாலை விபத்துகளை குறைப்பது எப்படி?’ என்ற தலைப்பில் இவரது வழிகாட்டுதலின்பேரில் மாணவர்கள் உருவாக்கிய படைப்பு மாவட்ட அளவில் முதல் பரிசைப் பெற்றது. அதேபோல, மதுரை வேலம்மாள் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் விபத்து தடுப்பு குறித்த இவரது மாவர்களின் படைப்பு முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வெற்றது. மேலும், தேசிய அளவிலும் சிறப்பு பரிசுகளை இவரது மாணவர்கள் பெற்றுள்ளனர்.
அதேபோல, பின்லாந்தில் 4 நாட்களும், ஸ்வீடனில் 4 நாட்களும் நடைபெற்ற கருத்தரங்குகளில் இவரது மாணவர் ஒருவர் கலந்து கொண்டு, அறிவியல் வளர்ச்சி மற்றும் தமிழ் கல்வி முறை குறித்து பேசியதற்கு சிறப்பு விருது கிடைத்தது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் தினத்தன்று பேரணி, கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்குவது என்பன போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளிலும் ஆசிரியர் செங்குட்டுவன் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வாறு மாணவர்களை வழி நடத்திச்செல்லும் ஆசிரியர் செங்குட்டுவன், தமிழக அரசு மற்றும் பல்வேறு பொது நல அமைப்புகள் வழங்கிய கனவு ஆசிரியர் விருது, அப்துல் கலாம் விருது, சர்.சி.வி ராமன் விருது, ஜி.டி நாயுடு விருது, ஆசிரியர் செம்மல் விருது, கலாம் கண்ட கனவு நாயகன் விருது என 100-க்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார். மேலும், சிறந்த பணியாளர் என மாவட்ட ஆட்சியரால் பாராட்டு சான்றிதழும், கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத ஆசிரியர் என மாவட்ட கல்வி அலுவலரால் பாராட்டுச் சான்றிதழும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் செங்குட்டுவன் கூறும்போது, ‘‘நான் பள்ளியின் படிக்கும்போது, தஞ்சாவூரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தும், குடும்ப வறுமை காரணமாக அங்கு சென்று வருவதற்கு கூட பணம் இல்லாததால், அந்த கண்காட்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மாணவர்களுக்கு பயண உதவி அதுபோல, என்னிடம் படிக்கும் மாணவர்களும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, எங்கு அறிவியல் கண்காட்சி நடந்தாலும், அவர்களை எனது சொந்த செலவிலேயே அழைத்துச் செல்கிறேன்.
எனது பணிக்காலம் முடியும் வரை என்னிடம் பயிலும் மாணவர்கள் தொடர்ந்து பல அறிவியல் படைப்புகளை உருவாக்கி சாதனை படைக்க பாடுபடுவேன். அவர்கள் அப்துல் கலாமை போன்று சிறந்த விஞ்ஞானியாக வேண்டும் என்பதே எனது ஆசை ’’என்கிறார். மாணவர்கள் பல அறிவியல் படைப்புகளை செய்ய தயார்படுத்தி வரும் ஆசிரியர் செங்குட்டுவனை மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமன்றி சக ஆசிரியர்களும் பாராட்டுகின்றனர்.
- பெ.பாரதி
WRITE A COMMENT