விலங்குகள் சூழ்ந்த வனப்பகுதியை கடந்து செல்லும் மாணவர்கள்


விலங்குகள் சூழ்ந்த வனப்பகுதியை கடந்து செல்லும் மாணவர்கள்
வனப்பகுதி வழியாக பள்ளி செல்லும் பெரியாத்து கோம்பையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்.

போடி

கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வத்தில் தேனி மாவட்டம் போடி அருகே வனப்பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் ஆபத்தான வனப் பகுதியை கடந்து சென்று வருகின்றனர். போடியில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் சிரங்காடு, பெரியாத்து கோம்பை வனப்பகுதிகள் அமைந்துள்ளன. அவற்றைச் சுற்றி அருங்குளம், ஊஞ்சல்மலை, பனஓடை, சின்னமுடக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் காபி தோட்டங்கள் அதிகம் உள்ளன. மேலும் மிளகு, எலுமிச்சை உள்ளிட்ட பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.

இங்கு பலரும் பாரம்பரியமாக கூலி வேலை, காவல் பணி செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தோட்டத்திலேயே குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் குழந்தைகள் கல்வி பயில போடிக்குத்தான் செல்ல வேண்டும்.

ஆனால் தோப்புகளும், வனங்களும் நிறைந்த இப்பகுதியில் வர்த்தக ரீதியான போக்குவரத்து எதுவும் இல்லை. இதனால் மாணவர்கள் பள்ளி செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தினமும் 3 கி.மீ. தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து பின்பு ஆட்டோவில் ஏறி பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இதற்காக காலை 7 மணிக்கு கிளம்பி வனப்பகுதியின் ஓடைப்பாதை வழியே இந்த மாணவ, மாணவிகள் நடக்கத் தொடங்குகின்றனர்.

வனப்பகுதியில் காட்டெருமை, செந்நாய், கரடி, மான், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் இருப்பதால் இவர்களது பெற்றோரும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உடன் நடந்து செல்கின்றனர். சிரங்காடு எனும் பகுதி வந்ததும் ஆட்டோவில் அனுப்பிவிட்டு மீண்டும் வீடு திரும்புகின்றனர். இதே போல் மாலையிலும் அழைத்துச் செல்கின்றனர். இதுகுறித்து மாணவர் ஒருவரின் தந்தை செல்வம் என்பவர் கூறுகையில், எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போக்குவரத்து வசதி இல்லை.

இருப்பினும் கிராம வனக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். வனப்பகுதியில் இருப்பதால் எங்களுக்கு அரசுக்கான சலுகைகளும், நலத்திட்ட உதவிகளும் கிடைப்பதில்லை" என்றார். பேருந்து வசதி தேவைகிராம வனக் குழுத் தலைவர் அசோக்குமார் கூறும்போது, "இப்பகுதியைச் சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் ஆட்டோ மூலம் போடி சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

எனவே, மாணவர்கள் சென்று வர அரசு குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் அல்லது தாட்கோ மூலம் மினி வேன் வாங்க கடனுதவி வழங்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகளை எளிதாக பள்ளிக்கு அனுப்ப முடியும்" என்றார். விலங்குகள் சூழ்ந்துள்ள வனப்பகுதி வழியே கல்விக்காக தினமும் பயணிக்கும் இவர்களின் தைரியமும், ஆர்வமும் வியப்பில் ஆழ்த்துகிறது.

FOLLOW US

WRITE A COMMENT

x