பார்வையாளர்களை கவர்ந்த மாணவர்களின் அறிவியல் கண்காட்சி


பார்வையாளர்களை கவர்ந்த மாணவர்களின் அறிவியல் கண்காட்சி
கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, விவசாயத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த படைப்பை ஆர்வமுடன் பார்வையிடும் பள்ளி மாணவிகள். படம்: எஸ்.குரு பிரசாத்.

சேலம்

சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்ற மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர் களை பெரிதும் கவர்ந்தன. மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் மற்றும் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்ட அளவிலான அறிவியல் கண்
காட்சி சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமை
வகித்து, அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 330 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று, 455 அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்தனர். குறிப்பாக, பெண்களின் தற்காப்புக்கு பயன்படும் வகையில் கண்டு பிடிக்கப்பட்ட மின்சார கையுறை, கார்பன் டை ஆக்சைடு வாயுவைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி, தட்ப
வெப்பநிலையை அறிய உதவிடும் செயற்கைக்கோள், ரயில் பாதையை வன விலங்குகள் கடக்கும்போது எச்சரிக்கும் கருவி என மாணவ, மாணவிகள் தங்கள் கற்பனைகளில் தோன்றிய அறிவியல் கருவிகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். இவை, பார்வையாளர்களாக வந்திருந்த மாணவ, மாணவிகளையும் ஆசிரியர்களையும் வியப்பில் ஆழ்த்தின.

அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த படைப்புகளில் 'ஒரு மாணவர் ஒரு கண்டுபிடிப்பு' என்ற பிரிவில் சேலம் குகை நகரவைப் பள்ளி மாணவி ஆர்.கே.விஷ்வபாரதி உருவாக்கிய 'கார்பன் டை ஆக்சைடில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம்' முதல் பரிசு பெற்றது. அறிவியல் கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட கணித கருத்தரங்கில், கொட்டவாடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜே.பிரேம்குமார், ஏ.ஜெகதீஸ் ஆகியோர் பரிசுகளை வென்றனர். இதேபோல் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுமதி (சேலம்), மதன்குமார் (சேலம் ஊரகம்), ராமசாமி (சங்ககிரி), விஜயா (எடப்பாடி), தங்கவேல் (ஆத்தூர்), மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x