மதுரை
ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமைகளை பற்றி பேசியுள்ளார் மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர். மதுரை மாவட்டம், சக்கிமங்கலத்தை அடுத்துள்ள கார்சேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தமிழ்ச்செல்வம். இவரது மகள் பிரேமலதா (22). கருமாத்தூர் கல்லூரி
யில் இளங்கலை படிப்பை முடித்து, சட்டக்கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு சிறப்பு அழைப்பு வந்துள்ளது. அதில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கடந்த அக். 1, 2 ஆகிய இரு நாட்கள் மாணவி உரை நிகழ்த்த வேண்டும் என இருந்தது.
இதன்பேரில் மதுரையிலிருந்து அக். 30-ல் தனியாளாக ஜெனீவா புறப்பட்ட பிரேமலதா, அங்கு பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில், ‘மனித உரிமைக் கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு’என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த சாதனை எப்படி நிகழ்ந்தது?
இவர் இளமனூர் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தபோது மனித உரிமைக் கல்வியை பயின்றுள்ளார். அப்போது மனித உரிமைக் கல்வி தொடர்பாக தயாரிக்கப்பட்ட ‘ஏ பாத் டூ டிக்னிட்டி' எனும் குறும்படத்தில் மனித உரிமைக் கல்வியின் அவசியம் பற்றி பேசி உள்ளார். இதையடுத்தே இவர் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க தற்போது அழைக்கப்பட்டார்.
மதுரை திரும்பிய மாணவி பிரேமலதா, தனது ஜெனீவா பயணம் குறித்து கூறும்போது, ‘‘ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியது புதிய அனுபவமாக இருந்தது. அங்கு எனது குறும்படம் திரையிடப்பட்டது. அது தொடர்பாக, என்னிடம் பல கேள்விகளை எழுப்பினர். அதற்கு நான் பதில் அளித்தேன். மனித உரிமைக் கல்வியை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்’’ என்றார்.
- கி.மகாராஜன்
WRITE A COMMENT