இஸ்ரோவை பார்வையிட 100 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


இஸ்ரோவை பார்வையிட 100 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இஸ்ரோ விண்வெளி கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்று இஸ்ரோவில் ராக்கெட் ஏவுவதை நேரடியாக பார்க்க தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் கே.வினோதா, எம்.மகிமா சுவேதா ஆகியோரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கவுரவித்தார். அருகில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளனர்.

ஈரோடு

அறிவியலில் சிறந்து விளங்கும் 100 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 100 கல்லூரி மாணவர்களை இஸ்ரோவை பார்வையிட அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

உலக விண்வெளி வாரத்தையொட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம்,கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து 3 நாட்கள் இஸ்ரோ விண்வெளி கண்காட்சியை கோபியில்நடத்தின. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கண்காட்சி நிறைவு விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் முதன்மை பொதுமேலாளர் ஆர்.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

கல்லூரி கல்வி கோவை மண்டல உதவி இயக்குநர் பி.பொன்முத்துராமலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, கோபி கலைஅறிவியல் கல்லூரியின் தலைவர் பி.கருப்பணன், செயலாளர் தரணி தரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 300மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:இஸ்ரோ விண்வெளி கண்காட்சியை ஈரோடு மாவட்டத்தில் உள்ளபள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என மொத்தம் 45 ஆயிரம் பேர்பார்வையிட்டுள்ளனர்.

கண்காட்சியையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவியலில் சிறந்து விளங்கும் 100 அரசுப் பள்ளிமாணவர்கள் மற்றும் 100 கல்லூரி மாணவர்கள் என 200 பேர் இஸ்ரோவின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள அழைத்து செல்லப்படுவார்கள்.

இந்த கண்காட்சியில் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் முதல் 2 இடத்தைபிடித்த மாணவிகள் கே.வினோதா, எம்.மகிமாசுவேதா ஆகியோர் இஸ்ரோவில் இருந்து ராக்கெட் ஏவும்போது, அதை அங்கிருந்து நேரடியாக விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பார்க்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

விழாவில், இஸ்ரோ உதவி இயக்குநர் கே.பொங்கிணன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, கோபி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தியாகராசு நன்றி கூறினார்.

FOLLOW US

WRITE A COMMENT

x