புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் முளைப்பாரிகளுடன் வந்து நம்மாழ்வார் படத்தை சுற்றி கும்மியடித்து அசத்தினர்.
நான்காம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் முளைப்பாரி குறித்த பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை கும்மியடித்தபடி சேந்தன்குடி அரசு தொடக்கப் பள்ளி 4-ம் வகுப்புஆசிரியை ஆர்.ஜெயந்தி மாணவர்களுக்கு கற்பித்துள்ளார்.
மேலும், முளைப்பாரி குறித்து மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அதுகுறித்து செயல்திட்டம் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் கடந்த வாரம் தங்களது வீடுகளில் சட்டியில் நவதானியங்களை விதைத்து முளைக்க வைத்தனர்.
7 நாட்களில் நவதானியங்கள் நன்றாக முளைத்திருந்த நிலையில், அதை பள்ளிக்கு கொண்டு வந்தனர். பள்ளி வளாகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் படத்தைச் சுற்றி பாடப்புத்தகத்தில் உள்ள பாடலை பாடியபடி கும்மியடித்து அசத்தினர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.பூமொழி கூறியது: ஆடிப்பட்டம் விதைக்கும்போது விவசாயிகள் தங்களது வீடுகளில் உள்ள தானியங்களின் முளைப்புத் திறனை பரிசோதிப்பது வழக்கம். இதையே தொன்றுதொட்டு முளைப்பாரி விழாவாக எடுக்கப்பட்டு வருகிறது.
முளைப்பாரிகளை சுமந்து செல்லும் போது அம்மனைப் போற்றி கும்மியடிப்பது வழக்கம். எனவே, முளைப்பாரி குறித்து மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது என்றார்.
WRITE A COMMENT