சிவகாசி
சிவகாசி, நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள இருக்கைகளை ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது.
சிவகாசியில் உள்ள பெரிய அரசுப் பள்ளிகளில் நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. இப்பள்ளியில், 765 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் சிவகாசி ரோட்டரி டவுன் சங்கம் சார்பில், 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக 10 மேசை, நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேசையிலும் தலா 4 பேர் தாராளமாக அமர்ந்து, படிக்க முடியும்.
அரசின் சர்வோதயா சங்கத்தின் மூலம் உயர் தரம் கொண்ட மேசை, நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. சிவகாசி டவுன் ரோட்டரி சங்க செயலாளர் அருண்குமார், முன்னாள் தலைவர் சண்முக நடராஜன், பூரண நடேசன், பாலாஜி பாபனாசம் ஆகியோர் நாரணாபுரம் பள்ளிக்காக இவற்றை வழங்கியுள்ளனர்.
இவற்றின் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ரூபாய் என்கிறார் அங்கு பணிபுரியும் கணிதப் பட்டதாரி ஆசிரியர் கருணைதாஸ். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ''எங்கள் பள்ளியில், மாணவர்கள் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் பத்தாம் வகுப்புக்கான தேர்வு மையம் வழங்கப்படவில்லை.
இதனால் ஆண்டுதோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர், இரண்டு பேருந்துகள் மாறிச்சென்று, பொதுத் தேர்வுகளை எழுதி வந்தனர். இதற்காக வருடத்துக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை பேருந்துக் கட்டணம் செலுத்தி வந்தனர். தற்போது தேர்வு எழுதத் தேவையான இருக்கை வசதிகள் பெறப்பட்டுவிட்டன.
இதனால் தேர்வு மையத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளோம். தேர்வு மையம் அமைந்தால் மாணவர்களின் பண விரயம் தவிர்க்கப்படுவதோடு, தேர்வுக்குப் படிக்க கூடுதல் நேரமும் கிடைக்கும்'' என்றார் ஆசிரியர் கருணைதாஸ்.
WRITE A COMMENT