அன்னை அரவிந்தர் சிறப்புப் பள்ளியில் சிறப்புக் குழந்தைகளின் வித்தியாச கொலு!


அன்னை அரவிந்தர் சிறப்புப் பள்ளியில் சிறப்புக் குழந்தைகளின் வித்தியாச கொலு!

ஓசுர்

நவராத்திரி என்றாலே நமக்கு மனதில் தோன்றுவது கொலுவாகத்தான் இருக்கும். அந்தக் கொலு ஓசூர், பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவ், டவுன் சிண்ட்ரோம் மற்றும் பிறவகை சிறப்புக் குழந்தைகளுக்காகவே இயங்கி வரும் அன்னை அரவிந்தர் சிறப்புப் பள்ளியில் வித்தியாசமாகவும் அறிவுபூர்வமாகவும் வைக்கப்பட்டது.

நவராத்திரியில் மண் பொம்மைகள் மூலம் கொலு வைப்பதற்கு ஒரு காரணம் உண்டு. மண்ணுக்குத்தான் உயிர்த் தன்மை உண்டு என்பதாலேயே மண் பொம்மைகள் கொலு பொம்மைகள் ஆகின. அந்த வகையில், அன்னை அரவிந்தர் சிறப்புப் பள்ளியில் வைக்கப்பட்ட கொலு இதோ:

நவராத்திரியில் பொதுவாக 5, 7, 9, 13 என்ற வரிசையில் படிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இங்கு 7 படிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் இசைக்கே வித்தான மும்மூர்த்திகள், ஆண்டாள் பிறந்த கதை, அஷ்ட லட்சுமிகளின் சொரூபங்கள், செல்வத்தைக் குறிக்கும் கனகதாரா, ஒவ்வொரு அவதாரத்தைக் கொடுக்கும் தசாவதாரம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

கிராமம் என்று சொன்னாலே அங்கு செய்யப்படும் விவசாயம், கூலி வேலை, தச்சு வேலை, பசுமை நிறைந்த சூழல் குறித்துக் கேள்விப்பட்டிருப்போம், அவை, தெளிவாக கண்ணுக்கு இனிமையாக, அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் காவிரி ஆறு குறித்துத் தெரியும், அது எவ்வாறு எப்படி உற்பத்தியாகிறது என்பதை மாணவர்கள் தத்ரூபமாக விளக்கியுள்ளனர்.

பொதுவாக நமது வாழ்க்கையில் பிறந்த நாள், மாப்பிள்ளை அழைப்பு, திருமணம், கல்யாண வரவேற்பு, வளைகாப்பு, சதாபிஷேகம் என்று பல நிகழ்வுகள் உண்டு. அவை அனைத்தையும் இங்கிருக்கும் குழந்தைகள், படம் பார்த்துத் தெரிந்து கொள்ளும் அளவுக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல வியாபாரம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், சூப்பர் மார்க்கெட்டின் செயல்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன.

பள்ளி, அதன் வகுப்பறை, பிரேயர் நடைபெறும் இடம், விளையாட்டு மைதானம் ஆகிய இடங்கள் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவ், டவுன் சிண்ட்ரோம் என சிறப்புக் குழந்தைகள், தங்களின் ஆசிரியர்களுடன் இணைந்து இவற்றை உருவாக்கியுள்ளனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x