கோவை: ஊராட்சி தலைவரின் விமான பயண திட்டத்தால், மாணவர் சேர்க்கை அதிகரித்ததுடன், இடைநிற்றல் நின்று, 100 சதவீத தேர்ச்சியுடன் அசத்தி வருகிறது அரசு பள்ளி.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிக்காரம்பாளையம் ஊராட்சியின் கீழ் வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு முதல்முறையாக அழைத்துச் சென்றார்.
கரோனா காரணமாக 2 ஆண்டுகள் அழைத்துச் செல்லவில்லை. மீண்டும் கடந்த 2022-ம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்றார்.
இம்முயற்சி, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, கடந்த 2019-ம் ஆண்டு இப்பள்ளியில் 273 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையானது 400-ஆக அதிகரித்துள்ளது. பெட்டதாபுரம், ஒன்னிபாளையம் பகுதிகளில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் 8-ம் வகுப்புக்கு பிறகு வேறு பள்ளிகளில் சேர்ந்து வந்த மாணவர்கள், கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.
இதன்காரணமாக, கடந்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் 69- ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை நடப்பாண்டு 109-ஆக அதிகரித்துள்ளது.பள்ளியில் இருந்து மாணவர்கள் பாதியில் நிற்பதும் நின்று, கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
இந்த உற்சாகத்தை குறைக்காமல் நடப்பாண்டும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார் ஞானசேகரன். கடந்த 8-ம் தேதி காலை கோவை விமான நிலையத்தில் இருந்து மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் என 55 பேர் விமானத்தில் சென்னை சென்றனர். சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் அனைவரும் கோவை திரும்பினர்.
இதுகுறித்து ஞானசேகரன் கூறும்போது, “3 ஆண்டுகளாக பத்தாம் வகுப்புமாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும் விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்கிறேன். இதுவரை 6 பேட்ச் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வரும் 15-ம் தேதி நடப்பாண்டின் இரண்டாவது பேட்ச் மாணவர்கள், பெற்றோர் என 55 பேர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இவ்வாறு மாணவர்களை கல்வியாண்டின் தொடக்கத்தில் அழைத்துச் செல்வது அவர்களுக்கு மன மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. அதன் விளைவு, பொதுத்தேர்வு முடிவிலும், மாணவர் சேர்க்கையிலும் எதிரொலித்தது எனக்கு மன நிறைவளிக்கிறது. உணவு, ஸ்நாக்ஸ், விமானம், ரயில் பயண கட்டணம், சுற்றுலா செல்லும் இடங்களில் நுழைவு கட்டணம் என அழைத்துச் செல்லும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.6,500 வரை செலவாகும்” என்றார்.
பள்ளியின் தலைமையாசிரியர் ச.சிவசுப்பையா, மூத்த பட்டதாரி ஆசிரியர் பிரேமா ஆகியோர் கூறும்போது, “மாணவர்களுக்கு இது நினைத்துப் பார்க்க முடியாத அனுபவம். ஊராட்சி தலைவர் ஞானசேகரன் விமான பயண ஏற்பாடு மட்டுமல்லாது, மாணவர்களுக்கான விளையாட்டு சீருடைகள், காலணிகள், யோகா பயிற்சி, நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, ஒற்றை பெற்றோர் இருந்தால் உயர்கல்விக்கு ரூ.5 ஆயிரம் என பல்வேறு வழிகளில் உதவிகள் வழங்கி வருகிறார்” என்றனர்.
WRITE A COMMENT