சென்னை: பதவி உயர்வுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி தேவையில்லை என்பதை தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் அகில இந்தியச் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளருமாகிய சே.பிரபாகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அகில இந்தியச் செயலாளரும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமாகிய அ.சங்கர் முன்னிலைவகித்தார். அகில இந்தியப் பொதுக்குழுக்கூட்ட முடிவுகள் குறித்தும், அதைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளருமாகிய ச.மயில் விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைத் தமிழ்நாடு அரசுகொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.
காலைச் சிற்றுண்டி, 7.5%தனி இடஒதுக்கீடு, உள்ளிட்ட திட்டங்களை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பனஉள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
WRITE A COMMENT