புதுச்சேரி: கடந்த கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சரிந்துள்ள சூழலில், நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வில் இழுபறியால் அரசு பள்ளிகளில் இம்முறை பொதுத்தேர்வுகளை சந்திக்கவுள்ள மாணவ, மாணவிகள் கலக்கத்தில் உள்ளனர்.
புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம் கிடையாது. புதுச்சேரி, காரைக்கால் மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தையும், மாஹே மாணவர்கள் கேரளா பாடத்திட்டத்தையும், ஏனாம்மாணவர்கள் ஆந்திர பாடத்திட்டத்தையும் பின்பற்றி கல்வி பயின்று வந்தனர். இதனால் புதுச்சேரி முழுவதும் ஒரே கல்வியாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டது.
முதற்கட்டமாக 2014-15-ம் கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அந்தந்த மாநில பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் படித்து வந்தனர்.
சிபிஎஸ்இ பாடத்திட்டம்: இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டு (2023-24) முதல் 127 பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளைத் தவிர, 1 முதல்9-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்-1ல்சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 10, 12-ம்வகுப்புகள் மட்டும் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் இறுதியாக பயன்படுத்தவுள்ளது.
அடுத்த கல்வியாண்டு இந்த வகுப்புகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறிவிடும். இதனால், தற்போது பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12-ம் வகுப்புகள் பயிலும் மாணவர்கள் கடும் கலக்கத்தில் உள்ளனர். இதுவரை ஆசிரியர் இடமாற்ற கலந்தாய்வு நடக்காததுதான் இதற்கு முக்கியக் காரணம்.
இதுதொடர்பாக மாணவ, மாணவிகள் தரப்பில் விசாரித்தபோது, "கலந்தாய்வு நடந்து இடமாற்றம் செய்வார்கள் என்பதால், அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக பாடங்கள் நடக்கவில்லை. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
டிசம்பருக்குள் பாடங்களை முடித்தால்தான் பொதுத்தேர்வுக்கு தயாராகமுடியும். நீட், ஜேஇஇ பயிற்சிகளுக்கும் தயாராக வேண்டும். முக்கியப் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. சில பள்ளிகளில் தற்போது பாடங்களை எடுத்து வரும் ஆசிரியர்களும், ‘எங்களுக்கு இடமாற்றம் வந்து விடும்’ என்று தெரிவிக்கின்றனர். சில ஆசிரியர்களோ, ‘வரும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடத்தை நடத்துவார்கள்’ என்று கூறி பாடங்களை நடத்துவதில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்கின்றனர்.
யார் மீது தவறு? - பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் ஆசிரியர்கள் கூறுகையில், "இடமாற்ற கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தி, பள்ளி தொடங்கும் போது பணிக்கு வந்திருந்தால்தான் சரியாக இருக்கும். தற்போது ஜூலை இரண்டாவது வாரம் வந்து விட்டது.
இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்து விட்டு, தற்போது பாடம் நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த முறை தேர்ச்சி விகிதம் குறைந்தது. இம்முறை உறுதியான முடிவை சரியான நேரத்தில் எடுக்காமல் கல்வித்துறை தவறி விட்டது. இதனால் பாதிக்கப்படுவது உண்மையாக உழைக்கும் ஆசிரியர்கள்தான்." என்றனர்.
குளறுபடிகள்: புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்பாரி இதுபற்றி கூறுகையில், "புதுச்சேரியில் ஆசிரியர்களுக்கான சரியான மாற்றல் உத்தரவு கொள்கை இதுவரை இல்லை. தற்போது இரண்டு மூன்று வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை உருவாகியுள்ளது. 900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. பணி இடமாற்றத்தில் பல குளறுபடிகள் உள்ளன. மூன்று முறை கல்வியமைச்சருடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடந்தது.
ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும்புதிய சிக்கல்களை அதிகாரிகள் உருவாக்குகின்றனர். தமிழகத்தைப் போன்றுபணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்பணியிட மாற்றல் நடந்தது. புதிய மாற்றங்கள் என உருவாக்கி ஆசிரியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் பணியமர்த்த வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால் புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களிலும் அரசு பள்ளிகளில் அந்தளவுக்கு ஆசிரியர்கள் இல்லை" என்றார்.
WRITE A COMMENT