சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் பள்ளிக் கட்டிடத்தில் வட்டாரக் கல்வி அலுவலகம் இயங்குவதால் இடநெருக்கடி ஏற்பட் டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மரத்தடியில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
சிங்கம்புணரியில் சீரணி அரங்கம் அருகில் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப் பள்ளி (எண் 2) செயல்பட்டு வருகிறது. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 4 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்குள்ள 6 வகுப்பறைகளில், ஒன்றில் தலைமை ஆசிரியர் அறை உள்ளது. மற்றொன்றில் வட்டாரக் கல்வி அலுவலகம் செயல்படுகிறது. மீதமுள்ள 4 அறைகளில் தான் வகுப்புகள் நடக்கின்றன.
இடநெருக்கடியால் மாணவர்களை மரத்தடியில் அமர வைத்து பாடம் கற்பிக்கின்றனர். அதேபோல் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் 11 பணியாளர் கள் பணிபுரிகின்றனர். அந்த அலுவலகமும் ஒரே ஒரு அறையில் செயல்படுவதால் பணியாளர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து சிங்கம்புணரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் கூறியதாவது: வட்டாரக் கல்வி அலுவலகம் 2010-ம் ஆண்டு வரை வாடகை கட்டிடத்தில் செயல்பட்டது. சொந்த கட்டிடம் கட்டாமல், திடீரென பள்ளிக்கு மாற்றப்பட்டது. ஏற்கெனவே மாணவர்கள் அமரவே இடமின்றி தவித்த நிலையில், தற்போது அங்கு அலுவலகம் செயல்படுவதால் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கல்வி அலுவலகத்தில் சிங்கம்புணரி ஒன்றியத்தில் 64 பள்ளிகளுக்குரிய ஆவணங்கள், ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை வைக்க இடமின்றி பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். நியூ காலனியில் பேரூராட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட 5 சென்ட் இடத்தில் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கான கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள் பதில்: இந்த பிரச்சினை குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், “பள்ளி பகுதியில் இடப்பிரச்சினையால் கூடுதல் கட்டிடம் கட்டுவதில் சிரமம் உள்ளது. இதற்கான தீர்வு குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என்றனர்.
WRITE A COMMENT