ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே கிராம அரசு தொடக்கப் பள்ளியை மூடாமல் இருக்க, தனியார் பள்ளிகளில் படித்துவந்த குழந்தைகளை கிராமத்தினர் அரசு பள்ளியில் சேர்த்தனர். அம்மாணவர்களுக்கு துண்டு, மாலை அணிவித்து கிராமத்தினர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.கொட்டகுடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. ஓராசிரியர் கொண்ட இப்பள்ளியில் 6 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததால், பள்ளியை மூடும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத் தடுக்க கிராமத்தினர் கூட்டம் நடத்தினர். அதில், எம்.கொட்டகுடி கிராமத்திலிருந்து, கமுதி,முதுகுளத்தூர், அபிராமம், பரமக்குடி உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ளதனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயின்ற 25 மாணவ, மாணவிகளை, தங்கள் கிராம அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயில அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது.
அரசு தொடக்கப் பள்ளிக்குச் சென்ற புதிய மாணவ, மாணவிகளுக்கு, பெற்றோர், முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் தர்மராஜன் ஆகியோர் துண்டு, மாலை அணிவித்து அனுப்பி வைத்தனர். பள்ளிக்கு வருகை தந்த அந்த மாணவர்களை, தலைமை ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன் வர வேற்றார்.
அரசுக்கு வேண்டுகோள்: இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் தர்மராஜன் கூறுகையில், “மூடப்படவிருந்த அரசு தொடக்கப்பள்ளியில் தற்போது 31 மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நிலைஏற்பட்டுள்ளது. எனவே, 2 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்” என்றார்.
WRITE A COMMENT