ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்கள் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேர்வு: அமைச்சர் சிவசங்கரிடம் நேரில் வாழ்த்து


ஆண்டிமடம் அரசு பள்ளி மாணவர்கள் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேர்வு: அமைச்சர் சிவசங்கரிடம் நேரில் வாழ்த்து

அரியலூர்: தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில், அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டிக்கான தேர்வு போட்டியும், சாம்பியன்ஷிப் போட்டியும், செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர் தமிழக அரசு விளையாட்டுக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், அரியலூர் மாவட்ட கிக்பாக்ஸிங் தலைவர் சென்சாய் ரங்கநாதன், மாவட்டச் செயலாளர் சத்யராஜ் ஆகியோர் தலைமையில் ஆண்டிமடம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

வயது அடிப்படையில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் மாணவர்கள் ரிஷிகா, மகாலட்சுமி, ரித்திகா, அஷ்யா,முகுந்தன், ராஜ்கிரன், ரேவன் பெட்ரிக் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இவர்கள், ஆகஸ்ட் மாதம் ராஞ்சியில் நடைபெறும் அகில இந்திய கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

இதையடுத்து, வெற்றிபெற்ற மாணவர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோரை அரியலூரில் நேற்று முன்தினம் சந்தித்தனர்.

அப்போது, மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், மாணவர்களின் போக்குவரத்துச் செலவை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

இதில், பள்ளித் தலைமை ஆசிரியர்(பொறுப்பு) அவிலாதெரசாள், ஆசிரியர்கள் கிருஷ்ண லீலா, பாலகுமாரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

WRITE A COMMENT

x