Published : 26 Aug 2021 03:14 AM
Last Updated : 26 Aug 2021 03:14 AM
கணித அறிவை மேம்படுத்த உதவும் கணித செயலி, திருப்பூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 870 பேர் படிக்கின்றனர். நடப்பாண்டில் மட்டும் புதிதாக 373 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு முழுவதும் வாட்ஸ்-அப் மூலமாக இணையதள வகுப்பு நடைபெற்றது. நடப்பாண்டிலும், இணைய வழிவகுப்பு மாணவர்கள் சிறந்த முறையில் பங்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், கற்றலில் மேலும்ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உதவியுடன் ‘Ahaguru ’எனும் கணிதத்துக்கான இலவச செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலியில் பள்ளிக்கென தனி பாஸ்வேர்டு உருவாக்கப்பட்டுள் ளது. 3, 4, 5-ம் வகுப்பு மாணவ,மாணவிகள் 500 பேர், இதில் உள்ள கணித வீடியோக்கள், மதிப்பீட்டுத் தாள்கள் ஆகியவற்றை ஓராண்டுக்கு பயன்படுத்தலாம்.
அந்தந்த வகுப்புக்கான வீடியோக்கள் மற்றும் பயிற்சித்தாள்கள் ஒவ்வொரு கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முடித்தவுடன் அடுத்தடுத்த சுற்றுக்கு செல்லலாம். ஒவ்வொரு கணக்காக மாணவர்களே செய்து பார்க்கலாம்.
செயலி குறித்த அறிமுக விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், பெற்றோர் மற்றும் குழந்தைகளிடையே செயலியை அறிமுகம் செய்து பேசினார்.
பள்ளி ஆசிரியர் மணிகண்டபிரபு கூறும்போது, ‘‘கடந்தாண்டைப் போலவே, நடப்பாண்டிலும் ஆன்லைனில் பாடத்தின் வீடியோ, கூகுள் மீட் மற்றும் கூகுள் மூலம் டெஸ்ட் லிங்க் அனுப்புகிறோம். இது மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை மேலும் வலுப்படுத்த கணிதத்துக்கென உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி மூலம் மாணவர்களின் கணித அறிவு மேம்படும். இணையம் எல்லோரிடமும் இருக்கிறது. அதனை கற்றலுக்கு ஏற்ற வகையில் எவ்வாறெல்லாம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறோம். இது போன்ற செயலிகள் மாணவ, மாணவிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். இன்றைய அறிமுக விழாவை தொடர்ந்து 3 முதல் 5 வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், இலவச செயலியை தரவிறக்கம் செய்யபள்ளி சார்பில் உதவி செய்யப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT