Published : 06 Feb 2020 08:50 AM
Last Updated : 06 Feb 2020 08:50 AM
திண்டுக்கல் அருகே ஊராட்சி அளவில் பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள பாறைப்பட்டியில் நீரின்றி அமையாது உலகு அமைப்பு, தமிழ்நாடு கல்வி மற்றும் பயிற்சி மையம் ஆகியவை இணைந்து பாறைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 5 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பொது அறிவுப் போட்டியை நடத்தின.
நான்கு பிரிவின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டியில் 10-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 150 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் 28 மாணவ, மாணவிகள் வெற்றிபெற்றனர். பாறைப்பட்டி ஊராட்சித் தலைவர் பாலாஜி தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. பசுமைப்பளுவம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சே.பிரதீப்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஆத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர் லியோவினோத்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் புத்தகங்கள், கேடயங்களைப் பரிசுகளாக வழங்கினார். பட்டிமன்ற பேச்சாளர் பாபு உட்பட பலர் பேசினர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் நடராஜன், நூலக புரவலர் மூக்கன், ஆசிரியர்கள் கருப்பையா, போனியாஸ், பெலிக்ஸ் பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக, சிலம்பம் பயிற்சி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சோ.ராமு, நீரின்றி அமையாது உலகு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ம.கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT