Published : 06 Jan 2020 10:12 AM
Last Updated : 06 Jan 2020 10:12 AM

பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில குடியரசு தின விளையாட்டுப் போட்டி மதுரையில் தொடங்கியது

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் புறாக்களைப் பறக்கவிட்ட அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. படம்:ஜி.மூர்த்தி

மதுரை

பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 62-வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நேற்று தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

அந்த வகையில் 62-வது குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கின. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டு போட்டியை தொடங்கிவைத்தார்.

அவர் பேசும்போது, "விளையாட்டுகள் மூலம் பள்ளி மாணவர்களிடையே நல்ல பண்புகள் வளர்கின்றன. நானும் பள்ளிப் பருவத்தில் விளையாட்டு வீரராக இருந்தேன். அதனால்தான் தற்போது வரை ஒழுக்கத்தைக் கடைபிடித்து வருகிறேன். தமிழகம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கி வருகிறது. தடகளப் போட்டிகள், சதுரங்கம், பீச் வாலிபால் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது" என்றார்.

அதிகாரிகள் பங்கேற்பு தொடக்கவிழா நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x