Published : 26 Nov 2019 08:50 AM
Last Updated : 26 Nov 2019 08:50 AM
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த அக்டோபர் மாதம் ‘இந்தியா- சீனா 2-வது முறை சாரா உச்சிமாநாடு’ நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பின்போது, இரு நாட்டின் 70 ஆண்டு தூதரக உறவு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இந்திய-சீன உறவின் 70-வதுஆண்டை முன்னிட்டு, இரு நாடுகளுக்கு இடையே நாடாளுமன்ற அளவிலான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும் வர்த்தகம், கல்வி, கலாசாரம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட நிலைகளிலும் இருதரப்பு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று தொடா்புகளை ஆராய, தமிழகத்துக்கும், சீனாவின் ஃபியூஜியான் மாகாணத்துக்கும் இடையிலான கடற்சார் தொடர்புகளை ஆய்வு செய்யவும் ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்த பரிசீலிக்கப்படும்.
இரு நாட்டு எல்லையிலுள்ள ராணுவமுகாம்களில் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதன் மூலம் இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மேலும் வலுப்படும். 6-ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன புத்த துறவி யுவான்சுவாங்கின் நினைவாக, சர்வதேச யுவான்சுவாங் மாநாட்டை சீனா நடத்தவுள்ளது. இந்தியா - சீனா வர்த்தகம், முதலீடு ஒத்துழைப்பு மாநாடுஆகியவை சீனா சார்பில் இந்தியாவிலும், மருந்து தொழில்சார் நிகழ்ச்சியை சீனாவில் இந்தியாவும் நடத்தவுள்ளது. இதைபோன்று, 70 நிகழ்ச்சிகளை இரு நாடுகளும் நடத்தவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு கடந்த ஆண்டு ரூ.6.8 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT