Published : 19 Nov 2019 02:02 PM
Last Updated : 19 Nov 2019 02:02 PM
பெற்ற தாயின் இறப்புக்குக் கூட செல்லாமல் பயிற்சிப் போட்டியில் விளையாடிய 16 வயது வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார்.
நசீம் ஷாவின் புயல் வேகப்பந்துவீச்சு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா வருகை பாகிஸ்தான் அணிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும்.
பாகிஸ்தானில் உயர்நிலைப் பள்ளித் தேர்வை முடித்துள்ள நசீம் ஷா முதல் தரப்போட்டிகளில் 6 ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். பந்துவீச்சில் நசீம் ஷாவின் துல்லியம், 145 கி.மீ. மேல் இருக்கும் வேகம், ஸ்விங் செய்யும் திறன் ஆகியவை அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 வயதில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற நசீம் ஷா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார். கடந்த வாரம் பெர்த்தில் நடந்த பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பங்கேற்றார்.
கடந்த வாரம் திங்கள்கிழமை இந்த பயிற்சிப் போட்டியில் நசீம் ஷா பங்கேற்ற நிலையில் அவரின் தாய் திடீரென உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். நசீம் ஷாவை பாகிஸ்தானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அவர் பாகிஸ்தானுக்கு செல்லாமல் பயிற்சிப் போட்டியிலேயே தொடர்ந்து பங்கேற்றார்.
தனது அதிகவேமான பந்துவீச்சு, பவுன்ஸர்கள், ஸ்விங் ஆகியவற்றால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறவிட்ட நசீம் ஷா, ஹாரிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.
வியாழக்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா களமிறங்கினால், 16 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகான வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கருடன் இணைவார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அதிகாரி வாசிம் கான் கூறுகையில், " நசீம் ஷாவின் தாய் இறந்த செய்தி கிடைத்ததும் அவரை பாகிஸ்தானுக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தோம். ஆனால், தேசிய அணிக்காகத் தான் விளையாடுவதே தாயின் விருப்பமாக கடைசி வரை இருந்தது. அதை நிறைவேற்ற நான் விளையாடுவேன் என்று தாய் இறப்புக்குக் கூட செல்லவில்லை. நசீம் ஷாவை பாகிஸ்தானுக்குப் போகச்சொல்லிப் பேசினோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
முஸ்லிம் சமூகத்தில் இறந்தவர்களை 24 மணிநேரத்தில் புதைத்துவிடுவார்கள் என்பதால், நசீம் ஷா பாகிஸ்தான் செல்வதற்கு ஏறக்குறைய 2 நாட்கள் வரை ஆகும் என்பதால், தாயைப் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்.
ஆனால், நசீம் ஷாவுக்கு எந்தவிதமான மனரீதியான பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக எப்போதும் அவரைச் சுற்றி வீரர்கள் இருந்து கொண்டு அரவணைக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ் பா உல் ஹக் கூறுகையில், " நசீம் ஷாவின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. பந்துவீச்சில் இருக்கும் ஒழுக்கம், கட்டுப்பாடு, பந்தைக் கட்டுப்படுத்தி வீசுவது, ஸ்விங் செய்வது, வேகம் என அனைத்திலும் தேர்ந்த பந்துவீச்சாளர் போல் இருக்கிறார். முதல் தரப் போட்டிகளில் 6 ஆட்டங்களில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பாகிஸ்தான் அணிக்கு மாற்றுப் பந்துவீச்சாளர் மட்டுமல்ல, வரும் டெஸ்ட் போட்டியில் எங்களின் துருப்புச் சீட்டாகவும் இருப்பார்" எனத் தெரிவித்தார்.
ஆதலால் வியாழக்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நசீம் ஷா களமிறங்குவது ஆஸ்திரேலிய அணியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நசீம் ஷா குறித்து ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித் கூறுகையில், "நசீம் ஷா அனுபவமற்ற பந்துவீச்சாளர். அவரின் பந்துவீச்சைப் பார்த்து நான் பயப்படமாட்டேன். என் வயதில் பாதிதான் இருக்கிறார். 16 வயது வீரர் பந்துவீசுவதைப் பார்ப்பது வித்தியாசமாகத்தான் இருக்கும். என்னிடம் எச்சரிக்கையாகவே அவர் பந்துவீச வேண்டும். நசீம் ஷா திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், களத்தில் யாரையும் எளிதாக எடுத்துக் கூடாது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT