Published : 19 Nov 2019 07:39 AM
Last Updated : 19 Nov 2019 07:39 AM

செய்திகள் சில வரிகளில்: ஜேஎன் பல்கலை.யை இயல்புநிலைக்கு கொண்டுவர சிறப்பு குழு

கோப்புப்படம்

புதுடெல்லி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) மாணவர் விடுதி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வாரத்துக்கு மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நாடாளுமன்றத்தின் முன்பாக முற்றுகை போராட்டம் செய்யவும் முயற்சி செய்து வருகின்றனர். இதனால், 10 கம்பெனி போலீஸார் பல்கலைக்கழகம் முன்பாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பல்கலை. இயல்பு நிலைக்கு கொண்டு வர, பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) முன்னாள் தலைவர் வி.எஸ் சவுகான், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே மற்றும் யூஜிசி செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின் ஆகிய 3 பேர் கொண்ட சிறப்பு உயர்நிலை குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் ஆர்.சுப்ரமணியன் அமைத்துள்ளார்.

டிக்டாக் செயலியை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு

மும்பை

சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியில்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அடிமையாகி கிடக்கின்றனர்.

இந்நிலையில், டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் ஹீனா தர்வேஷ் என்ற பெண், பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், “டிக்டாக் செயலியில் வடிகட்டப்படாத பாலியல் ரீதியான வீடியோக்களால், நாட்டின் இளைஞர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.

இதனால் பல குற்ற சம்பவங்களும், பல உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, இதில் தனிகவனம் செலுத்தி, நீதிமன்றம் டிக்டாக் செயலியை தடைசெய்யவேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவானது, இந்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x