Published : 05 Nov 2019 07:38 AM
Last Updated : 05 Nov 2019 07:38 AM
புதுடெல்லி
பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய மதிப்பீட்டு முறை தீங்குவிளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், அதை 2022-ம் ஆண்டுக்குள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) மாற்றி அமைக்கும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள கல்விக் கொள்கை 1986-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு 1992-ம் திருத்தப்பட்டது. 2014-ம்ஆண்டு தேர்தலின் போது பாஜகவின்தேர்தல் அறிக்கையில் புதிய தேசிய கல்விக் கொள்கை அமைக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை வரைவை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது.
அதில் மாற்றங்கள் செய்யக் கோரிநாடு முழுவதும் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன. இந்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு (என்இபி) இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம், அழுத்தம் அளிக்கும் நடைமுறையை அகற்றுவதற்காக பள்ளிகளில் இனி ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக 14 ஆண்டுகளுக்கு மேல்இருக்கும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை (என்சிஎஃப்) என்சிஇஆர்டி மறுஆய்வு செய்து வருகிறது. முன்னதாக மாணவர்கள் கல்வி பயிலும் போதே தங்கள் எதிர்காலத்துக்கு தேவையான துறைகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தேசியக் கல்விக் கொள்கை வரைவு முன்மொழிகிறது. பள்ளி வாரியங்களுக்கும் புதிய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கபுதிய கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ளது.
இதன்மூலம் மதிப்பீட்டு முறைகள் 21-ம் நூற்றாண்டுக்கு தேவையான திறன்கள் உறுதி செய்யப்படும். அதேபோல், மதிப்பீட்டு விதிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், வெவ்வேறு வாரியங்களின் மதிப்பீட்டு முறைகளை மாற்றி, ஒரே மாதிரி அமைக்கவும் புதிய கல்விக் கொள்கை பரிந்துரை செய்கிறது.
இதைபோல, 8-ம் வகுப்பு வரையில் தாய்மொழியில் மட்டுமே குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதுஅரசு பள்ளிகளுக்கு மட்டும் கட்டாயப்படுத்தப்பட உள்ளது. தனியார் பள்ளியில் ஆங்கில வழிக்கு இது பொருந்தாது.
9-ம் வகுப்பு வரை கல்வி உரிமை
அதேபோல், மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்புஉள்ளதால், அதுகுறித்து அமைச்சரவையில் இறுதி முடிவு செய்யப்படவுள்ளது என்று மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் கூறினார் கள். குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 3 ஆக தற்போது உள்ளது. இதை 4-ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 8-ம் வகுப்புவரை கல்வி வழங்குவது கட்டாயமாக உள்ளது. இந்த நிலை 9-ம் வகுப்பு வரை உயர்த்தப்பட உள்ளது.
புதிய கல்விக் கொள்கையின் இறுதி வடிவம், மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறிய கடைசி நிமிட திருத்தங்கள் இருக்கலாம் என்று அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT