Published : 24 Oct 2019 08:14 AM
Last Updated : 24 Oct 2019 08:14 AM

வெளிநாட்டு முதலீடுகளை  கவருவதில் கர்நாடகா முதலிடம்

புதுடெல்லி

இந்தியாவிலேயே புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், முதலீட்டுக்கு உகந்த இடமாகவும் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த நிலைகளில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் மாநிலங்கள் உள்ளன என நிதி ஆயோக் கூறியுள்ளது.
இந்தியாவில் தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ள மாநிலங்களின் விவரங்கள், கல்வியின் தரம் உட்பட பல்துறை சார்ந்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து, நிதி ஆயோக்ஆண்டுதோறும் பட்டியல் வெளியிடுகிறது. அந்த வகையில், கடந்த மாதம் கல்வி தொடர்பான அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது.

இந்நிலையில், இந்திய அளவில் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ளும், தொழில் முதலீடுகளை கவரும் சிறந்த மாநிலங்களின் தரவரிசைப்பட்டியலை நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜிவ் குமார் மற்றும் தலைமைநிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டனர்.

நிதி ஆயோக் ஆய்வறிக்கை

பொருளாதாரம், தொழில், சுற்றுச்சூழல், கல்வி சார்ந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க அரசுக்கு உதவும் நோக்கத்திலும், தொழில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் விதத்திலும் நிதி ஆயோக் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பிரதேச மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்ற பிரிவுகளாக அறிக்கை வெளியிடப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிமும், யூனியன் பிரதேசங்களில் டெல்லியும் முதல் இடத்தை பிடித்துள்ளன. தெலங்கானா, ஹரியாணா, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புத்தாக்க முயற்சிகளை செய்ய உகந்த இட வரிசையில் முன்னிலையில் உள்ளன.

தொழில் முதலீட்டுக்கு உகந்த பெரிய மாநிலங்களின் வரிசையில் கர்நாடகா முதலிடத்தை பிடித்துள்ளது.

அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா, ஹரியாணா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

யூனியன் பிரதேசங்கள்

பிஹார், ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் பின்தங்கிய நிலையில் உள்ளன. வடகிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள் பிரிவில் மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடத்தை பிடித்துள்ளன. லட்சத் தீவு, டெல்லி, கோவா ஆகியவை யூனியன் பிரதேசங்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இந்தியாவைப் போன்ற பெரிய நாட்டுக்கு பயனுள்ள கொள்கை வகுக்க மாநில அளவு பகுப்பாய்வை தாண்டி மண்டல அளவில் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதேபோல், தேசிய அளவிலான ஒரு கொள்கை மட்டும் போதாது. ஒவ்வொரு மாநிலமும் அதன் தனித்துவமான வளங்கள் மற்றும் பலங்களை அடிப்படையாக கொண்டு சொந்த கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x