Published : 15 Oct 2019 10:35 AM
Last Updated : 15 Oct 2019 10:35 AM
இந்திய ஏவுகணையின் தந்தை என்றும், மக்களின் குடியரசுத் தலைவர் என்றும் புகழப்படுபவர் அப்துல் கலாம். விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் அவருக்குள் பன்முகத் திறன்கள் இருந்தன. அவர் பல கவிதைகள் எழுதியுள்ளார். அத்துடன் வீணையை இசைக்க கூடியவர். எப்போதும் மாணவர்கள், இளைஞர்களைப் பற்றியே சிந்தித்தார்.
இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு ஒழுக்கம் ஒரு பாடமாக இல்லாமல், வாழ்க்கை முறையாக மாறும்” என்று குறிப்பிட்டார்.
பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. ராமாயணம், பகவத் கீதை, பைபிள் என மதங்களுக்கு அப்பாற்பட்டு கலாம் வாழ்ந்தார். திருக்குரானில் ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ என்ற வரியே, தனக்கு மிகவும் பிடித்தமான வரி என்று கலாம் அடிக்கடி குறிப்பிடுவார்.
கலாம் சொந்தமாக டிவி வாங்கியதில்லை. டிவி எப்போதுமே இரைச்சலை தருகிறது என்று கேலியாக கூறுவார். அவரது தனிப்பட்ட சொத்துகளில் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள், உடைகள், ஒரு வீணை, ஒரு சிடி பிளேயர், ஒரு லேப்டாப் மட்டுமே இருந்தன. புத்தகங்களை அதிகளவில் வாசிக்கும் பழக்கம் கொண்ட கலாம், பிரபஞ்சம் மற் றும் வானவியல் பற்றிய புத்தகங்களை அதிகமாக வாசித்தவர்.
கலாம் ஒரு தீவிர எழுத்தாளராகவும் இருந்தார். அவர் தனது வாழ்நாளில் 18 புத்தங்களும், 22 கவிதை தொகுப்புகளும், 4 பாடல்களும் எழுதியுள்ளார். அவரின் சுயசரிதையான ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் இந்தியாவின் அதிக விற்பனையான புத்தகங்களில் ஒன்று. அது உலகளவிலும் பல மக்களை கவர்ந்த புத்தகமாகும்.
கலாமுக்கு சிறு வயதில் இருந்தே இசை மீது அலாதி பிரியம். மசூதியில் ஒலிக்கும் பாங்கு, கோயிலில் பாடப்படும் திருவாசகம் போன்றவற்றை மெய் மறந்து கேட்பார். அதேவேளையில், வீணை ஞானமும் அவருக்கு உண்டு. கீர்த்தனைகளை சில வற்றை கற்று வைத்திருந்தார். விணை, வில்லுப்பாட்டு போன்றவற்றை விரும்பி கேட்பார். தனக்கு நெருக்கமான இசை கலைஞர்களை வீட்டுக்கு வர வைத்தும், அவர்களின் வீட்டுக்கு சென்றும் இசை மழையில் நனைவார்கலாம்.
இதன் நினைவாகதான், ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில், கலாம் வீணை வாசிப்பதுபோன்ற சிலையும் வைக்கப்பட்டுள்ளது. மரங்கள் மீது கலாமுக்கு அலாதி பிரியம் உண்டு. பசுமை குறித்து கவிதை கட்டுரை எழுதியுள்ளார். இதன் நினைவாக, அவரின் நினைவிடத்தில், 1000-த்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு புகழும் அவருக்கு ஒரு நாளில் வந்துவிடவில்லை. படிக்கும் போதிருந்தே ஒழுக்கமாகவும் கல்வியில் ஆர்வமுடனும் இருந்ததால்தான் என்றும் அவர் நம் நினைவில் நிற்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT