Last Updated : 02 Sep, 2025 07:25 AM

 

Published : 02 Sep 2025 07:25 AM
Last Updated : 02 Sep 2025 07:25 AM

அவர் எதையும் ‘Smart’ஆக செய்வார்! | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 147

சிலர் பேசும்போது அதைக் கேட்பவர்கள் ‘ஹியர் ஹியர்’ எனக் கூறுவதுண்டு. அதை ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும்? அதை எப்போது பயன்படுத்த வேண்டும்? - அது ‘hear, hear’. ஒருவர் பேசும்போது, அதோடு நீங்கள் மிகவும் ஒத்துப் போனால் அதை ஆமோதிக்கும் விதமாக நீங்கள் ‘hear, hear’ என உரத்த குரலில் கூறலாம். (நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால், கூடவே எதிரிலிருக்கும் மேசையையும் தட்டலாம்!).

‘Hear, hear’ என்பதை hear them/him/her என்பதன் சுருக்கம் என்று வைத்துக் கொள்ளலாம். இப்படிக் கூறும்போது பேசுபவரின் கருத்தை ஆமோதிப்பதுடன், உடன் இருக்கும் பிறரும் அவர் கூறுவதைக் கேட்க வேண்டும் என்பதை நாம் மறைமுகமாக உணர்த்துகிறோம்.

ஒன்றை smart ஆகச் செய்வது என்றால் தந்திரமாகச் செய்வது என்று பொருளா? - அல்ல. புத்திசாலித்தனமாகச் செய்வது. செய்யவேண்டிய வேலையை மட்டும் செய்வது. எந்தச் செயலுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதை அறிந்து அதை முதலில் செய்வது, அதை எப்படி எளிமையான விதத்தில் செய்வது ஆகியவற்றைப் பின்பற்றினால் அது smart working.

Exclaimed, surprised இரண்டும் ஒன்றா? - சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. Surprise என்பது வியப்படைவதைக் குறிக்கும். I am surprised. The party surprised me. Exclaim என்பது உணர்ச்சி மிகுதியில் ஒன்றை வார்த்தைகளாக வெளிப்படுத்துதல். இந்த உணர்ச்சி என்பது வியப்பாக இருக்கலாம். மகிழ்ச்சியாக இருக்கலாம். பயமாகவும் இருக்கலாம். ‘Oh, no!’, he exclaimed when he found that the answer, he had written for a question was wrong.

Adjective என்பது எப்போதும் nounக்கு முன்னால்தானே வரும்? - Noun என்பதை விளக்குவது adjective. Beautiful scene, elder brother, honest officer போன்றவற்றில் (beautiful, elder, honest ஆகிய) adjective சொற்கள் nounக்கு முன்னால் இடம்பெறுகின்றன. இவற்றை attributive adjectives என்பார்கள். My friend is lucky. The child looked sleepy. The swimming pool is dangerous. இந்த வாக்கியங்களில் lucky, sleepy, dangerous ஆகியவை my friend, the child, the swimming pool ஆகிய nouns குறித்து விளக்குகின்றன. எனவே, இவையும் adjectivesதான். இவற்றை ​predicative adjectives என்பார்கள். Predicateன் ஒரு பகுதியாக இந்த adjectives விளங்குகின்றன.

போட்டியில் கேட்டுவிட்டால்

கோடிட்ட இடத்தில் நிரப்ப வேண்டிய சரியான சொல் எது?

Persons living at the same time are called
(a) Ancestors
(b) Colleagues
(c) Contemporaries
(d) Forefathers
(e) Friends

நண்பர்கள் ஒரே காலத்தில் வாழ்பவர்கள்தான். ஆனால், ஒரே காலகட்டத்தில் வாழ்கிற அனைவரையும் நண்பர்கள் எனக் கூறிவிட முடியாது. Colleagues என்பவர்கள் உடன் வேலை செய்பவர்கள். ஒரே பணிச்சூழலில் பணியாற்றுபவர்கள். Ancestors, forefathers ஆகிய இரண்டு சொற்களும் முன்னோர்களைக் குறிப்பவைதான்.

ஆனால், ஒரு மெல்லிய வேறுபாடு உண்டு. Ancestors என்பவர்கள் உங்களோடு ரத்த பந்தம் கொண்ட முன்னோர்கள். Forefathers என்பவர்கள் ancestors ஆகவும் இருக்கலாம் அல்லது உங்களுடைய மதம், நாடு, பண்பாடு போன்றவற்றில், பழங்காலத்தில் வாழ்ந்த, உங்கள் முன்னோடிகளாகவும் இருக்கலாம்.

Contemporaries என்பது சம காலத்தில் வாழ்ந்தவர்களைக் குறிக்கும் சொல். இவர்கள் ஒரே நாட்டில் வாழ வேண்டும் என்பதும் அவசியமில்லை. சாக்ரடீஸ், அலெக்சாண்டர் ஆகியோர் contemporaries. லியோனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ ஆகியோர் contemporaries. எனவே contemporaries என்பதுதான் கோடிட்ட இடத்தில் நிரப்ப வேண்டிய சொல்.

சிப்ஸ்

விளாம்பழத்தை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடுவார்கள்? - Wood apple.

Martyrdom என்பது என்ன? - மதத்துக்காக, கொள்கைக்காகச் செய்யும் உயிர்த்தியாகம்.

விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் பகுதி airport. ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்படும் பகுதி? - Heliport.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x