Last Updated : 12 Aug, 2025 07:38 AM

 

Published : 12 Aug 2025 07:38 AM
Last Updated : 12 Aug 2025 07:38 AM

‘French fries’ ஐ கண்டுபிடித்தது யார்? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 144

Misnomer என்பது என்ன? - தவறான சொல் வழக்கைக் குறிக்க Misnomer பயன்படுத்தப்படுகிறது. அதாவது, பொருந்தாத பெயர். ஒன்றைப் பற்றிய உண்மை தெரிவதற்கு முன்பே அதற்குப் பெயர் சூட்டினால் இப்படி ஆகும். அல்லது அந்தப் பொருள் மாறிய பிறகும் பழைய பெயரே தொடர்ந்தாலும் இப்படியாகும்.

0-விலிருந்து 9 வரை எண்களை Arabic numerals என்பார்கள். ஆனால், Arabic numerals அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. அவை இந்தியாவில் தோன்றியவை.

Chinese checkers என்கிற விளையாட்டு சீனாவில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. French fries என்கிற உணவுப்பண்டம் பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. பெல்ஜியத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு புதிய மருந்தை உருவாக்கினால் அதை மனிதர்களுக்கு அளிப்பதற்கு முன் guinea pig என்கிற வகை உயிரினங்களுக்கு முதலில் அளித்து சோதனை செய்வார்கள். இவை கினி என்கிற நாட்டைச் சேர்ந்தவையல்ல. தென் அமெரிக்காவில் முதலில் காணப்பட்டவை. இவை பன்றிகளும் அல்ல. எலிகள். (ஒரு வேளை பருமனாக இருப்பதாலும் அவை வெளிப்படுத்தும் ஒலிகள் காரணமாகவும் அவை pigs என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.)

Jellyfish, starfish என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட உயிரினங்கள் மீன் வகையைச் சேர்ந்தவை அல்ல. சமீபத்திய, அகமதாபாத்-லண்டன் விமான விபத்தில் black box பெரிதும் விவாதிக்கப்பட்டது. விபத்துக்கு முன்னால் விமானத்தில் என்ன பேச்சுவார்த்தைகள் நடந்தது என்பதையும் இது பதிவுசெய்வதால் விபத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது. ஆனால், இது கறுப்பு நிறப் பெட்டி அல்ல. அது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படும்.

பென்சிலில் உள்ள எழுதுபொருள் என்ன என்று கேட்டால் பலரும் lead என்பார்கள். Lead என்பது காரீயம். ஆனால், பென்சிலில் நாம் எழுதப் பயன்படும் கருப்பான பொருள் கிராஃபைட். Light year என்பது காலத்துக்கான அளவீடு அல்ல. தூரத்துக்கானது.

Funny bone என்பது எலும்பு அல்ல. ஒரு நரம்பு. Tennis elbow என்கிற நோய்நிலை, டென்னிஸ் ஆடினால்தான் உண்டாகும் என்பத கிடையாது. Sea horse என்பதற்கும் குதிரைக்கும் தொடர்பு கிடையாது. இது ஒருவகை மீன். ஆக misnomer என்பது misleading term என்பதாகும்.

போட்டியில் கேட்டுவிட்டால்

A new idea was _______ during the discussion.
(a)   Born
(b)   Borne
(c)   Bourn
(d)   Bane

இதற்கான விடையை அறிய இந்த நான்கு சொற்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.
Born, borne ஆகிய இரண்டின் வேர்ச் சொல்லும் bear. ஆனால், இந்த இரண்டும் வெவ்வேறு பொருள்களைக் கொண்டவை    
Born என்பது பிறப்பு தொடர்பானது. She was born in Karnataka. He was born in 2010.

Borne, ‘தாங்கிய அல்லது சுமந்து செல்லப்பட்ட’ என்கிற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. The costs will be borne by us என்றால், “செலவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்று பொருள். Mosquito borne diseases. கொசுக்கள் சுமந்து பரப்பும் நோய்கள்.
Bourne என்பதற்கு ‘எல்லை’ எனப் பொருள். These discussions are beyond the bourne of our understanding.

What is the bane of your life? என்பது, “உன் வாழ்க்கையின் மிகப்பெரிய தொல்லை (அல்லது சாபம்) எது?” என்பதைக் குறிக்கிறது. பொதுவாக bane என்பது துன்பம் தரும் ஒன்று அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று. எனவே கேள்விக்கான விடை. A new idea was born during the debate (விவாதத்தின்போது ஒரு புதிய யோசனை பிறந்தது).

சிப்ஸ்:

I have lots of gratitude towards you எனலாமா? - I am very grateful to you.
I coming என்பது தவறா? - ஆம். I come அல்லது I am coming.
Awe என்றால்? - அளவு கடந்த மதிப்பு. பயபக்தி.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x