Last Updated : 29 Jul, 2025 06:38 AM

 

Published : 29 Jul 2025 06:38 AM
Last Updated : 29 Jul 2025 06:38 AM

‘There, their, they’re’ வித்தியாசம் என்ன? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 142

Possible என்பது feasible என்பதிலிருந்து எப்படி மாறுபடுகிறது? - Possible என்பது நடக்கக்கூடியது அல்லது ஒருவரால் நடத்தக் கூடியது என்பதைக் குறிக்கிறது. Feasible என்பது அது நடைமுறைக்கு ஏற்றதா என்பது தொடர்பானது. வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிப்பது ​possible. அதாவது அது நடைபெற முடியாத ஒன்று அல்ல.

ஆனால், வேற்றுகிரக வாசிகளைக் கண்டுபிடிப்பது feasible அல்ல. அதாவது இப்போது நமக்கு இருக்கும் முன்னுரிமைகள், இப்போது நமக்கு இருக்கும் நிதி நிலைமை, அதைக் கண்டுபிடிப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் போன்றவையும் இதில் கணிக்கப்பட்டு அந்த முயற்சி feasible அல்ல என்கிற முடிவுக்கு நம்மை வரச் செய்கிறது.

பாதை எதுவும் போடப்படாத மலையின் உச்சியில் வீடு ஒன்றை எழுப்பி அதில் நாம் தங்குவது possible ஆக இருக்கலாம். ஆனால், அது feasible அல்ல. புதிய வீட்டில் நம் பொருட்கள் இறக்கப்பட்டு சிதறிக் கிடக்கின்றன. அவை எல்லாவற்றையும் ஒரே நாளில் சரி செய்து ஒழுங்குபடுத்திவிட முடியுமா? Possible. ஓய்வு, உறக்கம் இல்லாமல் வீட்டில் உள்ள அத்தனை பேரும் முயன்றால் அது சாத்தியம்தான். Possible. ஆனால், நடைமுறையில் அப்படிச் செய்வது இயலாத காரியம். Not feasible.

There, their ஆகியவற்றுக்கிடையே குழப்பம் ஏற்படுகிறது. தவிர இந்த இரண்டில் they’re என்பதற்குச் சமமான சொல் எது என்பதும் புரிபடவில்லை. விளக்க முடியுமா? - இவை மூன்றுமே மூன்று வித்தியாசமான அர்த்தங்களை அளிக்கும் சொற்கள். There என்பது அங்கே (அருகில் இல்லை) என்பதைக் குறிக்கும் சொல். Please keep the books there. There comes a bird. Their என்பது அவர்களுடைய எனும் பொருள் கொண்டது. This is their land. It is their right.

They’re என்பது they are என்பதன் சுருக்கம். They are coming today என்பதை they’re coming today என்று சுருக்கிக் கூறலாம். இப்போது கீழே உள்ள வாக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அடிக்கோடிட்டுள்ள சொற்களின் ஆங்கில வடிவம் மேலே குறிப்பிட்ட மூன்றில் எது என்பதைக் கூறுங்கள்.

1. அவர்கள் இன்று வருகிறார்கள்.
2. அது அவர்களின் நாடு.
3. என் நண்பன் அங்கே போகிறான்.
4.அங்கே இருப்பது அவர்களின் வீடு. அவர்கள் இன்று அதில் குடியேறப் போகிறார்கள்.

மேலே கொடுக்கப்பட்ட பயிற்சிக்கான விடைகள்.

1.They’re
2.Their
3.There
4.There, their, they’re

ஆங்கிலத் தொலைக்காட்சி தொடர் ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒரு பெண் எந்தத் தவறும் செய்யாதபோதே அவரது மேலதிகாரி ‘You are dismissed’ என்றார். அந்தப் பெண்ணும் எந்த வருத்தமும் இல்லாமல், தன்னை வேலையை விட்டு நீக்கியதற்கான காரணத்தைக்கூடக் கேட்காமல் அங்கிருந்து நகர்கிறார்.

ஒருவேளை dismissed என்பதற்குப் பதிலாக அதே போன்ற உச்சரிப்பு கொண்ட வேறு ஏதாவது சொல் இருக்கிறதோ? அந்தத் தொடரின் அடுத்த பகுதியைப் பார்க்கும்போது அந்தப் பெண் அதே பணியில் தொடர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் காண வாய்ப்பு உண்டு! You are dismissed என்பதற்கு ‘நமது உரையாடல் முடிந்துவிட்டது.

நீங்கள் இந்த இடத்திலிருந்து கிளம்பலாம்’ என்கிற அர்த்தமும் இருக்கிறது. பெரும்பாலும் ராணுவம், காவல் துறையில் இதைப் பயன்படுத்துவது அதிகம்.

கேட்டாரே ஒரு கேள்வி

Liftக்கு facelift கொடுக்க முடியுமா அல்லது faceக்கு facelift கொடுக்க முடியுமா? - Facelift என்பது முகம் இளமைத் தோற்றம் அடைவதற்காகச் செய்யப்படும் அறுவை சிகிச்சை. அதே நேரம் ஒன்றின் தோற்றத்தை மேம்படுத்துவதற்காகச் செய்யப்படும் எந்தச் செயல்முறையையும் ஃபேஸ்லிஃப்ட் என்பதுண்டு. எனவே face, lift ஆகிய இரண்டுக்குமே facelift கொடுக்க முடியும்.

சிப்ஸ்:

Expedite என்றால்? - துரிதப்படுத்து

மந்திரவாதி வைத்திருக்கும் சிறு தடியை எப்படி அழைக்கலாம்? - Wand.

Hooray? - மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் கூவும் ஒலி.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x