Published : 08 Jul 2025 07:15 AM
Last Updated : 08 Jul 2025 07:15 AM
ஓர் ஆங்கிலப் படத்தின் சப்டைட்டிலில் eerie music என்று குறிப்பிட்டிருந்தார்கள். இது எந்த வகையான இசை? - நீங்கள் பார்த்தது திகில் காட்சியாக இருக்க வாய்ப்பு உண்டு. Eerie music என்றால் அச்சமூட்டுகிற, இயற்கைக்கு மாறுபட்ட இசை.
கேட்கும் திறன் இல்லாதவர்களும் சப்டைட்டில்களின் உதவியுடன் படம் பார்ப்பதுண்டு. அவர்களுக்கான அறிவிப்பாக ‘இந்த இடத்தில் திகிலூட்டும் இசை இடம்பெறுகிறது’ என்பது குறிக்கப்படுகிறது.
Between rose and Jasmine, I prefer rose. இந்த வாக்கியத்தின் பொருள் என்ன? - ரோஜா, மல்லிகை ஆகிய இரு மலர்களில் என் தேர்வு ரோஜாதான். ஆனால், நீங்கள் எழுதிய விதத்தில் ஒரு சிக்கல் தோன்றியிருக்கிறது! மல்லிகையைக் குறிக்கும் jasmine என்ற சொல்லின் முதல் எழுத்தை capitalல் குறிப்பிட்டிருக்கிறீர்கள். Between Rose and Jasmine, I prefer Rose என்று நீங்கள் எழுதியிருந்தால், Rose, Jasmine என்ற பெயர் கொண்ட இரு பெண்களில், Rose என்பவரே என் தேர்வு என்று பொருள்படும்.
Dual, duplicate ஒன்றா வேறா? - Dual என்பதை இருமை என்றும், double என்றால் இருமடங்கு என்றும் கூறலாம். Dual citizenship, dual role என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த கால திரைப்படங்களில் ஒரு பெண்ணின் பிம்பம் இரண்டாகப் பிரிந்து இரு வித நிலைகளை வெளிப்படுத்தி வாதிடும்.
‘கல்லானாலும் கணவன். அவன் என்ன செய்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு அவனுக்கு சேவை செய்வதே உன் கடமை’ என கதாநாயகியின் ஒரு பிம்பம் அவரைப் பார்த்துக் கூறும். அவரது மற்றொரு உருவம் 'அவன் செய்யும் சிறுமைகளை எல்லாம் ஏற்பது தவறு. சுதந்திரப் பெண்ணாக வெளியேறு’ எனக் கூறும். Dual functions! Double என்பது எண்ணிக்கை அல்லது அளவைப் பொறுத்தது. Double the amount, double the speed.
Elegy என்பதும் ஒப்பாரி என்பதும் ஒன்றுதானா? - Elegy வகை பாடல்களில் ஒரு சோகம் இருக்கும். அது இறந்த ஒருவரைப் பற்றியோ அல்லது இழந்த ஒன்றைப் பற்றியோ இருக்கும். சில நேரம் தத்துவம் அதில் பொதிந்து இருக்கும். தாமஸ் கிரே என்பவர் எழுதிய ‘Elegy Written in a Country Churchyard’ என்கிற பாடல் பிரபலம். அறியப்படாமலும் கொண்டாடப் படாமலும் வாழ்ந்து மறைந்த பல எளிய கிராம மக்களின் வாழ்க்கையை எண்ணி இந்தப் பாடல் துக்கப்படுகிறது.
இறப்பு என்பது ஒன்றே நிரந்தரம் எனும் நிலையில் உலகில் நாம் பெரும் வெற்றிகளெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிறது. மனிதனின் எண்ணங்கள் குறித்துக் கவலைப்படாமல் இயற்கை தன்பாட்டுக்குப் பயணம் செய்து கொண்டே இருக்கிறது என்கிறது.
Elegy என்பது இறந்தவர்கள் தொடர் பானது என்பதாலும் அதில் சோகம் புதைந்திருப்பதினாலும் அதை ஒப்பாரி வகை என்பதில் தவறில்லை. Elegy என்பதை எலெஜி என உச்சரிக்க வேண்டும்.
இதோ அடுத்த போட்டி: கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்ச் சொற்களின் ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்ற இந்திய நகரங்கள் எவை?
(எடுத்துக்காட்டாக, எறும்பு - TiruvanANTapuram. தீய - HyderaBAD) எல்லா விடைகளுமே மாநில அல்லது யூனியன் பிரதேசத் தலைநகரங்கள் என்பது கூடுதல் க்ளூ!
1. கோழி
2. கை
3. இப்போது
4. குன்று
5. இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்ணெழுத்து குறியீடு
6. குதிப்பது
7. தடை செய்வது
8. ஆட்டுக்கடா
விடைகளை மின்னஞ்சலில் அனுப்புங்கள். சரியான விடைகளை அனுப்பும் முதல் ஐந்து வாசகர்களின் பெயர்கள் இந்தப் பகுதியில் பிரசுரிக்கப்படும். உங்கள் பெயர், நீங்கள் வசிக்கும் ஊர், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ஆகிய மூன்று விவரங்களும் தேவை.
சிப்ஸ்
Conservancy workers என்றால்? - தூய்மைப்பணி தொழிலாளர்கள்
வேகமாக ஓடினால் மூச்சிரைக்கிறது. அதை எப்படி விவரிக்கலாம்? - Panting
Civilians என்பவர்கள் யார்? - பொதுமக்கள் (அதாவது ராணுவத்தில் இல்லாதவர்கள்).
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT