Last Updated : 01 Jul, 2025 07:38 AM

 

Published : 01 Jul 2025 07:38 AM
Last Updated : 01 Jul 2025 07:38 AM

‘Gesture’ என்றால் என்ன? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 138

நிலச்சரிவு என்பதைக் குறிக்கும் Landslide என்கிற சொல்லைப் படித்தேன். Slide என்பதற்கு மிக வேகமான சரிவு எனப் பொருள் கொள்ளலாமா? - மாறாகத் தடங்கல் இன்றி மெதுவாகச் சறுக்கிச் செல்வது என்பதைத்தான் slide என்கிற சொல் உணர்த்துகிறது. பக்கவாட்டில் நகரும் கண்ணாடிக் கதவுகளின் இயக்கத்தைக்கூட slide சொல்லால் குறிப்பிடுவதுண்டு. யாருமறியாமல் நழுவிச் செல்வதை slide என்கிற சொல் மூலம் குறிப்பிடுவதுண்டு. I slid out of the room when nobody was looking. (Slide என்பதன் இறந்த காலம் slid).

மைக்ரோஸ்கோப் மூலம் ஒரு பொருளை ஆராயும்போது அந்தப் பொருளைச் சிறிய கண்ணாடித் துண்டின் மீது வைத்து ஆராய்வார்கள். அந்தக் கண்ணாடித் துண்டையும் slide என்பதுண்டு. சிறுவர்கள் விளையாடும் சறுக்கு மரத்தைக்கூட slide என்பர்.

Often, always ஆகிய சொற்களுக்கும், rarely, seldom ஆகிய சொற்களுக்குமிடையே அர்த்தங்களில் வேறுபாடு உண்டா? - Always என்றால் எப்போதும். ஒவ்வொரு முறையும். 100 சதவீதம். Often என்றால் பெரும்பாலும், அடிக்கடி. 50 சதவீதத்தைவிட அதிகமாக எனலாம். இப்போது உங்களால் He always comes late என்பதற்கும் He often comes late என்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கும்.

Rarely, seldom ஆகிய இரண்டுமே கிட்டதட்ட ஒரே அர்த்தம் கொண்டவை. அரிதாக. இவை இரண்டையுமே often என்பதற்கான எதிர்ச்சொல்லாகக் கருத முடியும் என்றாலும் rarely என்பதைவிட seldom என்பது அரிதானது என்பதை மேலும் உணர்த்துகிறது. அதாவது never என்கிற சொல்லை அதிகம் நெருங்குகிறது seldom.

தோராயமாகச் சொல்வதானால்,

* 10 நாட்களில் ஒருவர் 10 நாட்களும் சரியான நேரத்துக்கு வந்து விட்டால், He never comes late என்றும்,
* 10 நாட்களில் ஒருவர் 8 அல்லது 9 நாட்கள் சரியான நேரத்துக்கு வந்து விட்டால், He seldom comes late என்றும்,
* 10 நாட்களில் 7 நாட்கள் சரியான நேரத்துக்கு வந்து விட்டால் He rarely comes late என்றும் குறிப்பிடலாம்.
* 10 நாட்களில் ஒருவர் 4 அல்லது 5 நாட்கள் மட்டுமே சரியான நேரத்துக்கு வந்தால், He often comes late என்றும் கூறலாம்.

Gesture என்கிற சொல்லின் பொருள் என்ன? - ஒரு செய்தியை அல்லது உணர்வை வெளிப்படுத்தும் முறையிலான கை அல்லது தலை அசைவு. சைகை. I saw the boy make a rude gesture at the conductor before getting down from the bus.
When I asked the receptionist where the lift was, she gestured towards the right.

போட்டியில் கேட்டு​விட்டால்

நான் ஒரு poetry எழுதினேன் என்பது சரியா அல்லது ஒரு poem எழுதினேன் என்பது சரியா அல்லது இரண்டுமே சரியா?

Poetry என்பது கவிதை என்கிற இலக்கிய வடிவத்தை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் சொல். இது ஒரு பொதுப்பெயர். Poem என்பது ஒற்றைப் பாடல் அல்லது ஒரு கவிதை. ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் என்றால் அவற்றை ​poems என்று குறிப்பிட வேண்டும்.
Bharathiyar’s poetry is novel and excellent.

She recited a poem on stage. எனவே வாசகரே, ‘நான் ஒரு poem எழுதினேன்’ என்பதுதான் சரி. ​Poetry என்கிற ஜானரில் (genre – பொதுப்பெயர்) நீங்கள் ஒரு ​poem எழுதி இருக்கிறீர்கள். Poems என்பது உண்டு. Poetries என்பது கிடையாது.

சிப்ஸ்:

Amid, amidst ஆகிய சொற்கள் எதைக் குறிக்கின்றன? - நடுவே.
Chronic disease என்பது என்ன? - நீண்ட காலமாக உள்ள நோய்.
Aadhaar card என்பதிலுள்ள aadhaar என்பதன் அர்த்தம் என்ன? - ஆதாரமான, அடிப்படையான.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x