Published : 01 Apr 2025 06:23 AM
Last Updated : 01 Apr 2025 06:23 AM
Nice try என்பது பாராட்டுதலைக் குறிக்கும் சொல்தானே?
இல்லை. கொஞ்சம் கேலியான வெளிப்பாடு. எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்று நீங்கள் ஒரு கேள்வி கேட்டு அதற்கு ஏழு என்று ஒருவர் பதில் அளித்தால் நீங்கள் Nice try என்று கூறுவதைப் போன்றது அது. கிட்டத்தட்ட நெருங்கி விட்டீர்கள், நல்ல முயற்சி என்றெல்லாம் பொருள்கொண்ட nice try என்ற சொற்களைக் கிண்டலாகப் பயன்படுத்துகிறார்கள்.
அப்படியே பொருள் எடுத்துக் கொண்டால் வரும் அர்த்தம் வேறாகவும் உண்மையில் அதைக் கூறுபவர்களின் எண்ணப் போக்கு வேறாகவும் இருக்கும்படியான வேறு சில வாக்கியங்களையும் தெரிந்து கொள்வோம்.
கெடுவாய்ப்பாக ஏதேனும் நேரும்போது Lucky me! என்று கசப்புடன் கூறிக் கொள்ளலாம். That went well என்பது நேர்மறையான வாக்கியம். ஆனால், பேச்சு வழக்கில் Well, that went well என்று கூறும்போது ஏதோ சரியாக நடக்கவில்லை என்பதை உணர்த்துகிறது (‘என்னவோ நல்லா நடந்தது’ என்பதுபோல).
ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல மற்றவர் வெகு நேரம் எடுத்துக்கொண்டு அதன் பிறகும் தனக்குச் சிறிது அவகாசம் வேண்டும் எனக் கேட்டால், ‘No really, take your time’ என்று பொறுமை இழந்து நீங்கள் கூறலாம். சோதனையான நிகழ்வுகள் அடுத்தடுத்து ஒரே நாளில் நிகழும்போது ‘Oh, fantastic! Another Monday’ எனக் கூறுவதுண்டு. பொதுவாக மக்கள் வார விடுமுறைக்குப் பிறகு வரும் திங்கள்கிழமையை விரும்ப மாட்டார்களே இவற்றையெல்லாம் ironical phrases எனலாம்.
Thriller திரைப்படம் ஒன்றில் ‘Copy that’ என்கிற வசனம் அடிக்கடி வந்தது. இதற்கு என்ன அர்த்தம்? - ஒருவர் சொன்னதை நீங்கள் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக Copy that எனக் கூறலாம். ஒருவர் கட்டளையிடும் போதும், யோசனை கூறும்போதும், நீங்கள் அதைச் செய்வீர்கள் என்றால் அதை உணர்த்தும் வகையிலும் Copy that என்று குறிப்பிடலாம்.
‘I have found the murderer’. ‘Copy that. Stay there. We are coming soon’. ‘We are here supporting you’. ‘Copy that. And thanks’. இந்த இடங்களில் copy என்பது இத்தாலியச் சொல்லான capisci என்பதில் இருந்து உருவான ஒன்றாகப் பயன்பட்டிருக்கிறது. இத்தாலிய மொழியில் அந்தச் சொல்லுக்கான அர்த்தம் ‘புரிந்துகொள்வது’.
Associate, assistant ஆகியவற்றுக்குப் பொருள் ஒன்றுதானா? - Associate என்று ஒருவரைக் கூறும்போது அவர் assistant என்ற நிலையைவிட மேம்பட்டவர். Associate என்பவருக்குப் பொறுப்புகள் அதிகம். எடுத்துக்காட்டாக, Associate director என்பவர் இணை இயக்குனர். Assistant director என்பவர் துணை இயக்குனர். ஒரு associate நடைமுறைகளைத் தீர்மானிப்பவராக இருப்பார். Assistant என்பவர் உதவியாளர்.
- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்'; aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT