Last Updated : 25 Mar, 2025 06:18 AM

 

Published : 25 Mar 2025 06:18 AM
Last Updated : 25 Mar 2025 06:18 AM

பிறந்தநாள் வாழ்த்தை இப்படிக் கூறுவதேன்? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 124

Returns என்ற சொல்லை வைத்து இரண்டு நண்பர்கள் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

அ) Many happy returns of the day என்ற வாழ்த்து முரணாக இருக்கிறதே!

ஆ) Return back என்பது திரும்பி வருவதைக் குறிக்கிறது. அப்படியிருக்க Income returns என்று கூறுவது ஏன்?

Return என்பதன் பொதுவான பொருள் திரும்புதல் அல்லது திருப்பி அளித்தல் என்பதாகும். I am returning to Chennai. Please return the defective goods to the seller.

Many happy returns of the day என்பதை நீங்களே முரண் என்று கூறுவது ஏன்? ‘அந்தக் குறிப்பிட்ட நாள் அன்று மட்டும்தானே நிகழும்? பின் அது மீண்டும் மீண்டும் திரும்ப வேண்டும் என்று வாழ்த்தினால் எப்படிச் சரியாக இருக்கும்?’ என்கிற கோணத்திலா?

Many happy returns of the day என்று ஒருவரின் பிறந்தநாளன்று வாழ்த்தினால், அவர் மேலும் பல பிறந்தநாள்களைக் காண வேண்டும் என்று கொள்ளலாம். இன்னொரு விதத்திலும் இது பொருத்தமாக இருக்கிறது. பிறந்தநாளன்று உற்சாகமாக இருப்பது இயல்பு. இந்த உணர்வு உங்களுக்குத் தொடர்ந்து எழட்டும் என்பதற்காகவும் அப்படி வாழ்த்தலாம்.

இப்போது income tax returnsக்கு வருவோம்.  இந்த கேள்வியில் return back என்ற சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதில் back என்பது தேவையற்றது. Income tax returns என்பதில் returns என்பது வருமான வரித்துறைக்கு நாம் சமர்ப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வமான ஆவணங்களைக் குறிக்கிறது. வரி செலுத்துபவர்கள் தங்கள் வருமானம், வரிகள் தொடர்பான விவரங்களை அதிகாரிகளுக்குத் திரும்ப அளிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

என் மேலதிகாரி எனக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் தகவலில் AFAIK என்று காணப்படுகிறது. இதன் பொருள் என்ன?

‘எனக்கு தெரிந்தவரை’ (As far as I know) என்பதற்கான சுருக்கம் இது. பலரும் குறுந்தகவல்களில் பயன்படுத்தும் வேறு சில சுருக்கங்களின் விரிவாக்கங்களையும் பார்ப்போம். IOW என்றால் in other words. ‘அதையே வேறு மாதிரி சொல்வதென்றால்’.

IRL என்றால் In real life. நிஜ வாழ்க்கையில். சினிமாவில் இப்படியெல்லாம் நடக்கலாம் IRL அது சாத்தியமல்ல என்பதாக முரணைக் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. He seems so confident online, but IRL he's really shy.

ROTFL என்பது rolling on the floor laughing என்பதன் சுருக்கம். ஒருவர் அனுப்பிய தகவலைப் படித்துவிட்டு நீங்கள் ‘விழுந்து விழுந்து சிரிப்பதை’ இது உணர்த்துகிறது. ASAP என்பது as soon as possible. கூடிய விரைவில்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x