Last Updated : 04 Feb, 2025 06:27 AM

 

Published : 04 Feb 2025 06:27 AM
Last Updated : 04 Feb 2025 06:27 AM

“No strings attached” என்றால் என்ன? - ஆங்கிலம் அறிவோமே 4.0 - 117

வாசகர் ஒருவர், “The actor was booked for assault” என்கிற வாக்கியம் குழப்பமாக இருப்பதாகவும் தெளிவு தேவை என்றும் கேட்டிருக்கிறார்.

நண்பரே, உங்கள் குழப்பம் assault என்ற வார்த்தை தொடர்பானதாக இருக்கக் கூடும். ‘அவர் அசால்ட்டாக நடித்து இருக்கிறார்’ என்று கூறும்போது, அவர் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார் என்று அர்த்தப்படுத்துகிறோம். ஆனால், assault என்ற வார்த்தையின் அர்த்தமே வேறு. ஒருவர் மீது நடத்தப்படும் தாக்குதல்தான் assault.

உங்கள் குழப்பம் booked என்பது தொடர்பாக இருக்கலாம். I booked a hotel. I booked a table at the restaurant. இதுபோன்ற வாக்கியங்களில் முன்னதாக ஒதுக்கீடு செய்தல் என்ற பொருளில் booked பயன்படுத்தப்படுகிறது. ஆனால், சட்டப் பின்னணியில் ‘booked’ என்பது ஒரு குற்றம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அதை செய்தவர் மீது அந்தக் குற்றத்தைப் பதிவு செய்யும் செயலாகும். He was booked for overspeeding.

உங்கள் குழப்பம், நடிக்கத் தெரியாத அவரை actor என்று குறிப்பிடுவதா என்பதுபோல் இருந்தால், மன்னிக்கவும், அது இந்தப் பகுதியின் எல்லைக்கு அப்பாற்பட்டது.

No strings attached என்பது எதைக் குறிக்கிறது? - எந்த மறைமுக நிபந்தனையோ எதிர்பார்ப்போ இல்லாமல் ஒன்றை முன்வைப்பது அல்லது அளிப்பது. He gave the money, no strings attached என்றால் அவர் கொடுத்த பணத்தை நான் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதற்குப் பதிலாக நான் வேறொரு செயலை அவருக்கு சாதகமாக செய்ய வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. முழுக்க முழுக்க வெகுமதியாகத்தான் அந்தப் பணத்தைக் கொடுத்தார் என்று அர்த்தம்.

சில விளம்பரங்களில் கவர்ந்திழுக்கும்படி எதையோ விற்பதாக அல்லது தருவதாகக் கூறிவிட்டு பொடி எழுத்துகளில் conditions apply என்று போட்டு இருப்பார்கள். அதாவது, அந்தக் கவர்ச்சிகரமான திட்டத்தை அல்லது சலுகையை அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கான நிபந்தனைகள் உண்டு ஒன்று பொருள். இதற்கு நேரெதிரானது No strings attached.

பொம்மலாட்டத்தில் பொம்மைகள் தானாக இயங்க முடியாது. அவற்றில் இணைக்கப்பட்டிருக்கும் கயிறுகள் (strings) மூலம்தான் அவை ஆட்டி வைக்கப்படுகின்றன. No strings attached என்பது அப்படிப்பட்ட கட்டுப்பாடு அல்லது மறைமுகமான கட்டாயம் எதுவும் இல்லாத நிலையைக் குறிக்கிறது.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x